இஸ்லாமியரை தேர்வெழுத அனுமதிக்காத தொல்லியல்துறைக்கு உயர்நீதிமன்றம் அபராதம்

01/02/2011 23:34

தொல்லியல்துறையில் பணியில் சேர்வதற்கான தேர்வு எழுத இஸ்லாமியர் அனுமதிக்கப்படவில்லை. இதற்காக அந்த துறைக்கு உயர் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து நல்ல முகமது என்பவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,

தொல்லியல்துறையில் `எபிகிராபிஸ்ட்', `கியுரேட்டர்' (காப்பாளர்) உள்ளிட்ட 4 பதவிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நான் அந்த 4 பதவிகளுக்குமே விண்ணப்பித்தேன். குறிப்பாக கியுரேட்டர் பதவிக்கு முன்னுரிமை அளித்திருந்தேன். ஆனால் தேர்வு எழுதமுடியாதவாறு எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

கியுரேட்டர் பதவிக்கு சம்ஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றும், நான் இந்து மதத்தினர் அல்லாததால் மற்ற 3 பதவிகள் அளிக்க முடியாது என்றும் கூறி எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதற்கான உத்தரவை கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ம் தேதி பிறப்பித்தது. இந்த உத்தரவை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு தொல்லியல் துறை பதில் மனு தாக்கல் செய்தது. அதில் இந்து சமயம் பற்றி தெரிந்திருந்தால்தான் எபிகிராபிஸ்ட் போன்ற பதவிகளுக்கு வரமுடியும். ஆனால் அவர் இஸ்லாமியர் என்பதால் தான் நிராகதரித்தோம். கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அவரது விண்ணப்பத்தை நிராகரித்தோம் என்றும் கூறியிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்துரு பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,

தொல்லியல்துறை என்பது இந்து சமய துறையல்ல. அதில் சில பணிகளுக்கு மட்டும் தான் இந்து சமயத்தினராக இருக்க வேண்டும். கிறிஸ்தவம், இஸ்லாமியம், புத்தமதம் ஆகிய மதங்களுக்கான தொல்லியல் விஷயங்களும் உள்ளன. ஆகையால் தொல்லியல்துறையில் பணிகளுக்கு இந்துக்கள் தான் சேர வேண்டும் என்று மததத்தின் அடிப்படையில் ஒதுக்க முடியாது.

கியுரேட்டர் பணிக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்றால் அதை முன்கூட்டியே அறிவித்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் விண்ணப்பித்த பிறகு அந்தக் காரணத்தை காட்டி நிராகரிப்பது முறையன்று.

எனவே மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக 12 வாரங்களுக்குள் பிரதிவாதிகள் பரிசீலித்து முடிவு செய்ய வேண்டும். மேலும், மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரம் பிரதிவாதிகள் வழங்க வேண்டும் என்று அவர் அதில் கூறியிருந்தார்.

Thatstamil . oneindia.com