ஈராக் தாக்குதலின் போது அமெரிக்காவுடன் ரகசியமாக பங்கேற்ற கனடிய படைகள்: விக்கிலீக்ஸ்

22/05/2011 17:50

ஈராக் நாட்டின் மீது அமெரிக்கா 2003ம் ஆண்டில் சர்ச்சைக்குரிய படையெடுப்பு தாக்குதலை நடத்தியது.

இந்த படையெடுப்பை ஆதரிக்க மாட்டோம் என 2003ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி கனடாவின் அப்போதைய பிரதமர் ஜீன் செரிடன் பொதுச் சபையில் அறிவித்தார்.

 

கனடாவின் நிலைப்பாட்டுக்கு அவரது லிபரல் காகஸ் கட்சி உறுப்பினர் பலத்த ஆரவாரத்துடன் கையொலி எழுப்பின. ஆனால் அதே நாளில் கனடாவின் உயர் மட்ட அதிகாரி அமெரிக்காவின் தாக்குதலுக்கு ரகசிய ராணுவ உதவி அளிப்பதாக உறுதியளித்தார்.

 

ஈராக் போரில் கனடாவின் இரட்டை நிலையை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு கனடாவையும் அமெரிக்காவையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஈராக் போரில் கனேடிய படைகளும் பங்கேற்று இருப்பதை இந்த தகவல்கள் உணர்த்தி உள்ளன.

 

ஈராக் தலைநகர் பாக்தாத் மீது போர் விமானங்கள் தாக்குதலை துவங்குவதற்கு இரண்டு நாட்கள் முன்பாக கனடா சர்ச்சைக்குரிய போரில் பங்கேற்க போவது இல்லை என அறிவித்து வெளி உலகிற்கு சமரச நண்பனாக காட்டிக் கொண்டது.

 

கனடா பொதுச் சபையில் அறிவிப்பு வெளியான அதே நாளில் கனேடிய உயர் அதிகாரிகள் ஒட்டாவாவில் உயர் மட்ட அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தூதர்களை சந்தித்து ஈராக் போருக்கு ரகசிய ஆதரவு தெரிவித்தனர்.

 

கனடாவின் ரகசிய ஆதரவு குறித்த செய்தியை அமெரிக்க தலைமையகம் வெள்ளை மாளிகைக்கு ஒட்டாவா தூதரகம் மூலம் அனுப்பியது. இந்த ரகசியத் தகவலின் முதல் தகவலை அழித்து விடுமாறு 2 நாட்களில் அமெரிக்க தூதரகம் கூறியிருந்தது.

 

விக்கிலீக்ஸ் இணையத்தள தகவல் குறித்து லண்டனில் உள்ள கனடா தூதர் ஜேம்ஸ் ரைட் கருத்து கூற மறுத்தார். அந்த நாளில் கனடாவுக்கான அமெரிக்க தூதராக இருந்த பால் செலிசி கூறுகையில்,"விக்கிலீக்ஸ் குறிப்பிடும் நாளில் கனடா தலைநகர் ஒட்டாவாவில் இல்லை" என்றார்.

நியூஸ்ஓநியூஸ்.காம்