வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் பொருளாதாரத் தடை

02/09/2010 10:44

வட கொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடையை அமெரிக்கா விதித்துள்ளது.

வட கொரியாவின் தலைவர் இரண்டாம் கிம் ஜோங் சீனா சென்று திரும்பிய அடுத்த நாளே அந்நாட்டுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதாரத் தடையை விதித்துள்ளது.

வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்தியையும், வர்த்தகத்தையும் முடக்கும் நோக்கில் மீண்டும் அந்நாட்டுக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க தரப்பில் மேலும் கூறப்பட்டிருப்பது:

வட கொரியாவின் ரகசிய அணு ஆயுதத் திட்டத்துக்கு உடந்தையாகவுள்ள நிறுவனங்கள், தனிநபர்களின் சொத்துக்களை முடக்கியும், அவர்கள் அமெரிக்காவின் நிதி அமைப்பு முறையினை பயன்படுத்த முடியாத வகையிலும் இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அந்தவிதத்தில் வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்காக போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்பாட்டின் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டின் ரகசிய பிரிவுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள கிரீன் பைன் அசோசியேட் கார்ப்பரேஷன் மற்றும் அதன் தாய் நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கொரியாவின் நிறுவனங்களான தேசோங் வர்த்தக நிறுவனம், கொரியா ஹியூங்ஜின் வர்த்தக நிறுவனம் ஆகிய இரு நிறுவனத்துக்கும் இந்த புதிய பொருளாதாரத் தடை பொருந்தும். இந்த இரு நிறுவனங்களும் ஈரான், சிரியாவுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது.

பேச்சு நடத்த விருப்பம்-அமெரிக்கா: இதனிடையே, வட கொரியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சு நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஆனால் உபயோகமான வகையில் பேச்சு இருக்கும் என்றால் மட்டுமே வட கொரியாவுடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே தெரிவித்துள்ளார்.

Dinamani