ஊழலை ஒழிக்க ஜன் லோக்பல் மட்டும் போதுமா? - வெப்துனியா

23/08/2011 21:56

நமது நாட்டில் புரையோடியுள்ள ஊழலை ஒழிக்க வலிமையான லோக்பால் சட்டம் தேவை என்றும், தாங்கள் உருவாக்கியுள்ள ஜன் லோக்பால் சட்ட வரைவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கோரி இன்று 8வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்துக் கொண்டிருக்கிறார் காந்தியவாதி அண்ணா ஹசாரே.

மத்திய அரசு உருவாக்கியுள்ள லோக்பால் சட்ட வரைவு போதுமானதல்ல என்று ஹசாரே தலைமையிலான அணியில் இடம் பெற்றுள்ள அர்விந்த் கேஜ்ரிவால், மத்திய முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷண், அவருடைய மகனும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைருமான பிரசாந்த் பூஷண் ஆகியோர் கூறுகின்றனர். இந்த நிலையில், ஹசாரே அணியோடு பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு முன்வந்துள்ளது.

அண்ணா ஹசாரே தலைமையிலான குழு வடிவமைத்த ஜன் லோக்பால் சட்ட வரைவிற்கான அடிப்படை இதுதான்:

1. இப்போதுள்ள ஊழல் தடுப்பு ஆணையம் (Chief Vigilance Commissioner) வெறும் ஆலோசனை அமைப்பு மட்டுமே. இந்தியாவைப் போன்ற ஊழலில் திளைக்கும் நாட்டில் ஊ.த.ஆ. வெறும் 200 பேரோடு மட்டும் இயங்கும் பலவீனமான அமைப்பாகும். இதனால் ஊழலை கட்டுப்படுத்த முடியாது.

2. ஊழல் புகார்களை விசாரிக்கும் அமைப்புகள் - மத்திய புலனாய்வுக் கழகம் (சிபிஐ) உள்ளிட்டவை - மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. எனவே அவைகளால் ஊழல் புகார்களின் மீது சுதந்திரமாகச் செயலாற்ற முடியாது.

3. இப்போதுள்ள ஊழல் தடுப்பு அமைப்பு எதையும் அணுகி சாதாரண குடிமகனால் ஒரு புகாரை அளித்து, உரிய தீ்ர்வைப் பெறுவது சாத்தியமில்லை. எனவே வலிமையான, தனித்த, சுதந்திரமான ஊழல் தடுப்பு அமைப்பை உருவாக்க வேண்டும்.

4. அதற்கு தாங்கள் உருவாக்கியுள்ள ஜன் லோக்பால்தான் தீர்வு. இது நேரடியாக புகாரைப் பெறும், அதன் மீது புலனாய்வு அமைப்புகளைக் கொண்டு விசாரணை நடத்தும். ஓராண்டிற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, அடுத்த ஓராண்டில் நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்று நடைமுறைப்படுத்தும். எனவே குற்றவாளிகள் குறைந்த காலத்தில் தண்டனை பெறுவார்கள்.

5. அதுமட்டுமின்றி, ஜன் லோக்பால் வரைவு சட்டமானால், ஊழல் செய்ததாக உறுதி செய்யப்பட்டவரின் சொத்துக்களை பறிமுதல் செய்யப்படும். இந்த சுதந்திர அமைப்பு மத்திய அரசு அளவில் ஜன் லோக்பால் என்றும், மாநில அளவில் ஜன் லோக் ஆயுக்தா என்ற பெயரிலும் செயல்படும். இதன் கீழ் மத்திய அளவில் ம.பு.க.வின் ஊழல் தடுப்புப் பிரிவு கொண்டு வரப்பட வேண்டும். மாநில காவல்துறையின் ஒரு பிரிவு லோக் ஆயுக்தாவின் கீழ் கொண்டு வரப்படும். எனவே ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் மட்டுமே தீர்வு என்கிறது அண்ணா ஹசாரே அணி.

பிரதமரின் கோரிக்கை கவனிக்கத்தக்கதா?

இந்த நிலையில்தான், கொல்கட்டாவில் இந்திய வணிக மேலாண்மைப் பள்ளியின் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மன்மோகன் சிங், லோக்பால் எனும் ஒரு அமைப்பை மட்டுமே உருவாக்கி ஊழலை ஒழித்து விட முடியாது என்றும், அதற்கு பல்வேறு முனைகளில் இருந்து செயலபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

“லோக்பால் எனும் ஒரு அமைப்பை மட்டுமே உருவாக்கி ஊழலை ஒழித்துவிட முடியாது. நீதி அமைப்பில் பல மேம்பாடுகளைச் செய்து, அதற்கு ஆதரவளித்து தரப்படுத்தப்பட வேண்டும். அரசு நிர்வாகத்துடன் எப்போதெல்லாம் தங்களது தேவைகளுக்காக மக்கள் வருகிறார்களோ அப்போதெல்லாம் இலஞ்சம் மூலம் ஊழல் பெருகிறது. அதே நேரத்தில் அரசு ஒப்பந்தங்கள் மூலம் பெரும் அளவிற்கு ஊழல் நடைபெறுகிறது. அதை தடுப்பதற்கான வழிமுறைகள் போதுமானதாக இல்லை.

பொருளாதார சீர்த்திருத்தமும், சுதந்திரமும்தான் ஊழலுக்கு வித்திட்டன என்று நினைப்பது தவறானது. உண்மையான அமைப்புச் சீர்த்திருத்தம் செய்யப்பட்ட இடங்களில் ஊழல் இல்லை. எனவே, அரசு அமைப்பையும், நடைமுறைகளையும் விரிவாக சீர்த்திருத்துவதன் மூலம் மட்டுமே நிர்வாக இயந்திரத்தை தூய்மைப்படுத்த முடியும” என்று பேசியுள்ளார்.

ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவரா மன்மோகன் சிங் என்ற வினாவும் எழுகிறது. ஏனெனில் இவருடைய ஆட்சியில்தான் இந்தியாவின் ஊழல், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு கொடி கட்டிப் பறக்கிறது. ஆனால், ஊழல் எந்த அளவிற்கு நமது நாட்டின் அரசியல் - நிர்வாக அமைப்பில் பரவியுள்ளது என்பதை நிச்சயம் நன்கு அறிந்தவராகவே பிரதமர் இருப்பார் என்பதில் ஐயமில்லை. எனவே, லோக்பால் எனும் ஒரு அமைப்பை மட்டுமே ஏற்படுத்தி ஊழலை ஒழித்துவிட முடியாது என்று பிரதமர் கூறியுள்ள கருத்து கவனித்தில் எடுத்துக் கொ்ண்டு சிந்தித்துப் பார்க்க வேண்டிய விடயமே.

உலகளாவிய ஊழலும், இந்தியாவின் பங்கும்

இந்தியாவை மட்டுமே சார்ந்துள்ள மிகப் பெரிய எதிர் சக்தியாக ஊழல் திகழவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டியது மட்டுமின்றி, உலக அளவில் ஊழல் இல்லாத நாடு என்று கூறுவதற்கு ஒரு நாடும் இல்லை என்பதும் உண்மையாகும். தூய்மையான நிர்வாகத்தைத் தரும் நாடாக கருதப்படும் சுவிட்சர்லாந்து நாட்டில்தான், உலகெங்கிலும் ஊழலால் கொள்ளையடிக்கப்படும் பணத்தை இரகசிய கணக்குகளில் வைத்து காப்பாற்றும் வங்கிகள் செழிக்கின்றன என்பதை மறந்துவிட முடியாது.

உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் ஊழலின் மொத்த அளவு 1.6 டிரில்லியன் டாலர்கள் (ரூ.72 இலட்சம் கோடி)! எனவே ஊழல் என்பது இந்தியாவின் பிரச்சனை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சனையாகும்.

அதிலும் குறிப்பாக முன்னேற்ற மூச்சுத் திணறிக்கொண்டிருக்கும் மூன்றாவது உலக நாடுகளை தன்னகத்தே கொண்டிருக்கும் ஆசியா, ஆப்ரிக்கா, தென் அமெரிக்கா ஆகிய நாடுகளில்தான் ஊழலும் கொடி கட்டிப் பட்டொளி வீசிப் பறக்கிறது. அதில் முன்னணியில் நிற்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. வெளிப்படையான பன்னாட்டு அமைப்பு (Transparency International) 2010ஆம் ஆண்டில் வெளியிட்ட ஊழல் புரிதல் குறியீட்டில் (Corruption Perception Index), ஊழல் நிறைந்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா 87வது இடத்தில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. மற்றொரு ஆய்வு - இதுவும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்டு டோஹாவில் நடைபெற்ற ஊழலுக்கு எதிரான உலக மாநாட்டில் வைக்கப்பட்டது. அதில் ஊழலில் கொடிக்கட்டிப் பறக்கும் 149 நாடுகளில் இந்தியா 70வது இடத்தில் உள்ளதென கூறப்பட்டுள்ளது.

ஆக, நமக்கு மேல் கடுமையான ஊழல் நாடுகள் குறைந்தது 69 உள்ளன, நம்மை விட மேம்பட்ட அல்லது குறைந்த ஊழல் கொண்ட 80 நாடுகள் உள்ளன. அடுத்த கண்டுபிடிப்புதான் மிக முக்கியமானது (சுவையானதும் கூட): இந்தியாவில் நடைபெறும் ஊழலில் 95% ரொக்கமாகவே நடைபெறுகிறது (கேஷ் அண்ட் கேரி). இந்த கேஷ் அண்ட் கேரி ஊழலில் ஒரே ஒரு இடத்தை டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஷனல் உதாரணமாகச் சுட்டிக்காட்டுகிறது. அது, சரக்குகளை நாடு முழுவதும் சாலை வழிகளில் கொண்டு செல்லும் சரக்குந்துகள், இடைமறிக்கும் போக்குவரத்து காவலர்கள், சுங்கச் சாவடிகள் என்று சட்டப் பூர்வமான அமைப்புகளுக்கு அளிக்கும் இலஞ்சம் மட்டும் ஆண்டிற்கு 5 பில்லியன் டாலர்கள் (ரூ.22,500 கோடி). இதை எந்த லோக்பால் வைத்து ஒழிப்பது? 
 
நமது நாட்டில் சாலையில் கைமாறும் இலஞ்சமே இந்த அளவிற்கு என்றால், ஒவ்வொரு நாளும் வட்டாட்சியர் அலுவலகங்களில் - சாதிச் சான்றிதழில் இருந்து வாரிசு சான்றிதழ் வரை பல சான்றிதழ்களைப் பெற பரிமாறும் இலஞ்சத்தின் அளவு அமெரிக்க டாலர்கள் கணக்கில் எத்தனை பில்லியன்கள் இருக்கும் என்று ஆய்வு நடத்திக் கூற முடியுமா? எப்போதெல்லாம் வட்டாட்சியர் அலுவலகங்களில் ரெய்டு நடக்கிறதோ அப்போதெல்லாம், மேசைக்கு மேசை கத்தை, கத்தையாக அரசு புலனாய்வு அதிகாரிகளே கைப்பற்றுகின்றனர். இது செய்தியாகவும் வருகிறது. இதை லோக்பால் அமைப்பு எவ்வாறு தடுக்கும்? இதேபோல் தமிழ்நாட்டில் மட்டும் உள்ள 75 போக்குவரத்து காவல் துறையின் உரிமம் வழங்கும் அலுவலகங்கள் மிகப் பெரிய ஊழல் முதலைகள் வசிப்பிடங்கள் அல்லவா? 15 ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விப்பட்டது: ஒவவொரு நாளும் போக்குவரத்து அமைச்சருக்கு சென்றது ரூ.4 கோடி! இன்று எவ்வளவு ஆகியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். இவை யாவும் இந்தியாவின் குடிமகன் தனது வாழ்க்கையில் ஒரு முறை நாடிச் செல்லும் இடங்கள். இங்கு சென்று தங்களுடைய தேவையைப் பெறும் மக்கள் - ஊழல் குற்றச்சாற்று கூற லோக் ஆயுக்தாவை நாடுவார்களா? லோக் ஆயுக்தா கர்நாடகாவில் இயங்குகிறதே, அங்கு இந்த ஊழல் பற்றியெல்லாம் மக்கள் புகார் அளித்தனரா? இல்லை.

மத்திய அரசின் மிக முக்கியமான மூன்றுத் துறைகளை எடுத்துக்கொள்வோம். 1. சுங்கத் துறை, 2. வருமான வரித்துறை, 3. உற்பத்தி வரித் துறை. இந்த மூன்றுத் துறைகளில் ஊழலும் இலஞ்சமும் எந்த அளவிற்கு கொடி கட்டிப் பறக்கிறது என்பதை யாரும் யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஆனால், அது எப்படி முறைபடுத்தப்பட்டு நடைபெறுகிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சுங்கத் துறையை கொள்ளலாம்.

கப்பலில் வரும் சரக்குப் பெட்டகங்களை (கண்டெய்னர்) துறைமுகங்களில் இருந்து வெளிக்கொண்ர, கிளியரிங் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். இவர்கள் அந்த கண்டெய்னர் தொடர்பான விவரங்களை பதிவு செய்து (பில் ஆஃப் என்ட்ரி), ஒவ்வொரு மேசையாக நகர்த்திச் செல்ல தனித் தனியாக இலஞ்சம் செலுத்த வேண்டும். அப்போதுதான் குறுகிய காலத்தில் கண்டெய்னரை வெளிக்கொணர முடியும். இலஞ்சம் கொடுக்கத் தவறினால், வேலை நடக்காது, கண்டெய்னர் வெளியே வர கால தாமதமாகும், அதுவரை துறைமுக நிர்வாகத்திற்கு இருப்புக் கட்டணம் (demurrage) செலுத்த வேண்டும். இதை எந்த கிளியரிங் ஏஜெண்ட்டாவது விரும்புவாரா? இதேபோல், கண்டெய்னர் கப்பலில் ஏற்றுவதற்கு முன்னர் சுங்க அதிகாரி சோதனை செய்து கையெழுத்திட தனியாகத் தரவேண்டும். இப்படி பல்வேறு வகைகளில் நடக்கும் ஊழலை எதிர்த்து புகார் தரவே யாரும் இல்லை, அது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி பல ஊழல்கள் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளன. இதைத்தான், இராஜீவ் காந்தி முக்கிய கதாநாயகனாகத் திகழ்ந்த போபர்ஸ் பீரங்கி பேரத்தை மக்கள் முன் கொண்டு சென்ற, முன்னாள் பிரதமர் வி.பி.சிங், “நமது நாட்டில் ஊழல் நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது” (Corruption is institutionalized) என்று கூறினார்.

அண்ணா ஹசாரேக்கு ஆதரவாக நடத்தும் போராட்டத்தில் தங்கள் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளை பங்கேற்கச் செய்துவரும் பல கல்வி நிறுவனங்கள், ஒன்றாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கைக்கு ரூ.30,000 முதல் 40,000 வரை வசூலித்தவை என்பதை நினைத்துப் பார்த்தால், ஊழல் என்று இவர்கள் கருதுவது எதை என்பதும் புரியவில்லை.

இப்படி இந்தியாவின் அரசு நிர்வாக அமைப்பிலும், அன்றாட சமூக வாழ்க்கையிலும் இலஞ்சம், ஊழல் என்பன ஏற்றுக்கொள்ளப்பட்ட சொற்களாவே ஆகிவிட்டன. எனவே, ஒரு அதிகாரப் பூர்வமான, சுதந்திர அமைப்பை ஏற்படுத்துவதால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறுவது மறுக்க முடியாத உண்மைதான். இதற்கு எடுத்துக்காட்டு கூற வேண்டுமெனில், நமது நாட்டில் தேர்தல் ஆணையம் சுதந்திரமான அமைப்புதான், ஆனால் அதனாலேயே தேர்தல்கள் சுதந்திரமாக - அதாவது வன்முறையற்று, பணப்பட்டுவாடா செய்யப்படாமல், வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்படாமல் நடந்துவிட்டதா? இல்லை. ஆனால், கடந்த ஆண்டு தமிழக சட்டப் பேரவைத் தேர்தலின்போது மக்களிடையே சுதந்திரமாகத் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியதாலும், அதற்கேற்றவாறு மிகக் கடுமையாக தேர்தல் ஆணையம் உறுதியுடன் செயல்பட்டதாலும், தேர்தல் ஆணையத்திற்கு பின்னணியில் இந்த நாட்டின் அரசியல் நிர்வாக அமைப்பில் அனுபவம் பெற்ற மூதறிஞர்கள் துணை நின்றதாலும், பணநாயகத்தில் இருந்து ஜனநாயகம் வென்றது.
இது ஊழலுக்கான லோக்பால் அமைப்பிற்கும் பொருந்தும். லோக்பால் அமைப்பு மட்டுமே ஊழலை ஒழித்துவிடாது, நிச்சயம் முடியாது. ஆனால் மக்கள் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற மனதார விரும்ப வேண்டும். அந்த நிலை உருவாக வேண்டும். 
 
நிர்வாக முடிவுகள் வெளிப்படையாக எடுக்ககப்பட வேண்டும

மக்கள் தங்களுடைய அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஊழல் ஒரு வழியாகிவிட்டதை நமது நாட்டவர் எவரும் மறுக்க முடியாது என்பதற்காகவே மேற்கண்ட உதாரணங்கள் காட்டப்பட்டன. அதே நேரத்தில் இந்த நாட்டை உலுக்கிய மிகப் பெரிய ஊழல்களுக்கு வித்திட்டது பிரதமர் கூறும் ஒப்பந்தங்கள் மட்டுமல்ல, மத்திய, மாநில அமைச்சரவைகள் எடுத்த கொள்கை முடிவுகளும்தான் என்பதை ஒப்புக்கொண்டாக வேண்டும்.

இதற்கு பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். 2ஜி அலைக்கற்றை ஊழலின் வேர் எங்கிருக்கிறது? அமைச்சரவை எடுத்த முடிவில் அல்லவா உள்ளது? ஏலம் வேண்டாம், முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்றெல்லாம் ‘வழிமுறைகள’ வகுத்தது மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அல்லவா? 2ஜி அலைக்கற்றைச் சேவை நடத்த உரிமத்தைப் பெற்றப் பிறகு, நிறுவனத்தின் பங்குகளை ஒன்றுக்கு பத்து விலை வைத்து அயல் நாட்டு நிறுவனங்களுக்கு விற்றுவிட்டு, அதனை முதலீட்டு விலக்கல் என்றும், அந்நிய நேரடி முதலீட்டிற்கு வழி திறந்துவிடுதல் என்றும் கூறி ஏமாற்றுவது ஊழல் அல்லவா? அரசுக்கு வரும் வருவாய், உரிமம் பெற்ற நிறுவனம், தொழில் நடத்தாமலேயே பங்குகள் மட்டும் விற்று இலாபம் அடித்ததே, இது ஊழல் இல்லையா?

இதேபோல், சுரங்க ஊழல் எப்படி பிறந்தது? எங்கே பிறந்தது? மத்திய அமைச்சரவை எடுத்த கொள்கை முடிவில்தானே? இந்த நாட்டின் கனிம வளங்களை சுரங்கம் வைத்து கொள்ளையடிக்க மத்திய அரசு வகுத்த கொள்கைதானே வழிவகுத்தது? இதற்கு பிரதமரின் பதில் என்ன? ஒரு டன் இரும்பு தாதுவுக்கு வெறும் ரூ400 மட்டும் உரியம் (ராயல்டி) கொடுத்துவிட்டு, டன் எஃகு பல ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்பட்டதே, இப்படி ஒரு கொள்ளை வேறு எந்த ஒரு நாட்டிலாவது நடைபெற்றதா? நடைபெறுகின்றதா? வளர்ச்சிக்கான கொள்கை முடிவின் யோக்கியதை இதுதானா?

தூய மின் சக்திக்கு அணு மின் நிலையங்கள் அவசியம் என்று கூறிவிட்டு, ரூ.3,500 கோடிக்கு, 550 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கும் அதி நவீன வேக அணு உலைகளை (Fast Breeder Reactors) அமைக்கும் ஆற்றல் பெற்ற இந்திய நாடு, பிரான்சில் இருந்து 1,650 மெகா வாட் மின் தயாரிப்புத் திறன் கொண்டு அணு உலைகளை ரூ.30,000 கோடிக்கு வாங்குவது ஏன்? இதைப் பற்றிக் கேள்வி எழுப்ப ஒரு அரசியல் சக்திக்கும் இந்த நாட்டில் நா எழவில்லையே ஏன்? அணு உலை வாங்கலில் அனைவருக்கும் பங்கு வரும் என்பதாலா? இதுபோன்ற கொள்கை முடிவின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளின் பேரால் நடைபெறும் கொள்ளையை லோக்பாலுக்கு கொண்டு வரப்போவது யார்? டெக்னிக்கல் ஊழல் அல்லவா இது? இப்படி நமக்குப் புரியாதா எத்தனையோ முடிவுகள் உள்ளன. ஒவ்வொரு துறையின் வாயிலாகவும் இந்த நாட்டின் வளங்கள் சூறையாட அனுமதி அளிப்பதற்குப் பெயர்தான் கொள்கை முடிவுகள். இதனை வெளிப்படையாக ஒருபோதும் அரசுகள் எடுத்ததில்லை, இதில் மற்றொரு இரும்புத் திரையும் உள்ளது. நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிடக் கூடாது என்கிறது அரசமைப்பு. நீதிமன்றமே தலையிடாத இடத்தில் லோக்பால் என்ன செய்ய முடியும்?

இப்படி ஏராளமான ஊழல் ஊற்றுக்கண்கள் இந்த நாட்டில் உள்ளன. எனவே, லோக்பால் என்கிற ஒரு சுதந்திர அமைப்பை மட்டுமே உருவாக்கி இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது என்பது உண்மையே. ஆயினும், அப்படியொரு அமைப்பை ஏற்படுத்துவதற்கான அவசியம் முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளது என்பதும் உண்மையே. எனவே ஹசாரே அணி கூறுவது போல, அந்த அமைப்பு வலிமையான அமைப்பாக இருக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்க கருத்தாகும்.

அதே நேரத்தில் ஊழலைப் பற்றிய ஆழமான விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட வேண்டும். அதற்கு இன்றைக்குப் போராடும் சக்திகள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதனை அரசியல் கட்சிகள் செய்ய முடியாது. மக்கள் அமைப்புகள்தான் செய்ய முடியும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஜனநாயகம் என்பது மத்திய மாநில அரசுகளின் வெளிப்படையான செயல்பாட்டில்தான் உள்ளது. கொள்கை முடிவுகளும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் இரகசியமானவை என்று அரசுகள் கூறுவதை மக்கள் மறுக்க வேண்டும். வெளிப்படைத் தன்மையில்தான் ஜனநாயகம் செழிக்கும். இரகசியங்களில் ஊழல்தான் பெருகும்.

ஊழலை ஒழிக்க மூன்று வழிகளை டோஹாவில் கூடிய ஊழல் ஒழிப்பு மாநாடு முன்வைத்துள்ளது: அவை 1. நவீனமயமாக்கல், 2. திறன் மேம்படுத்துதல், 3. வெளிப்படையான செயல்பாடு. ஊழலை ஒழிக்கத் தேவையான அமைப்புகள் என்று அது பரிந்துரைத்திருப்பது: 1.லோக்பால், 2. கடும் தண்டனை, 3. சமூக விழிப்புணர்வு, 4. ஊழல் செய்தால் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சம்.

இவையணைத்திற்கும் மேலாக செய்யப்பட வேண்டியது என இரண்டு முக்கிய செயல்பாடுகளை பரிந்துரைத்துள்ளது, அவை: 1. பொருட்களின் விலை யாவும் நியாயமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டுபிடித்தல் (Price Discovery), 2. சொத்துக் குவிப்பு பற்றி ஆராய்தல் (Wealth Tracking) ஆகியனவாகும். விலை நிர்ணயம் செய்யப்படுவதையும், சொத்துக் குவிப்பையும் கண்காணிக்க தனித்த ஒரு சுதந்திர அமைப்பை ஏற்படுத்தினால் போதும், பொருளாதார சக்திகளின் திருவிளையாடல்களை தடுத்து நிறுத்திவிடலாம்.

இதையெல்லாம் நிறைவேற்றக் கூடிய கட்சி தான் இந்தியாவில் இல்லை. அதை மக்கள் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் இறுதி வழி.