எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதா முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை - லாலு, முலாயம்

31/08/2010 10:03

எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர எதிர்ப்புத் தெரிவித்து மக்களவையில் சமாஜவாதி மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிகள் திங்கள்கிழமை கடும் அமளியில் ஈடுபட்டன.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது பாகிஸ்தானுக்கு சென்று விட்டவர்களின் சொத்துகளை நிர்வாகம் செய்வது தொடர்பாக 1968-ல் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதில்  சில திருத்தங்களைக் கொண்டு வந்து, அந்த சொத்துகளை அரசே கையகப்படுத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டது.

ஏனெனில் நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் இது போன்ற சுமார் 2 ஆயிரம் சொத்து வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ஆனால் இந்த சட்டத் திருத்த மசோதாவுக்கு, மக்களவையில் முலாயம் சிங் யாதவின் சமாஜவாதி கட்சி, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இது முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி அவர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் வரை அவை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பின் இந்த விஷயத்தை முலாயம் சிங் யாதவ் எழுப்பினார். "முஸ்லிம்களை இரண்டாம்தர குடிமக்களாக்க இந்த மசோதா வழி செய்கிறது. இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் உரிமையைப் பறிக்கிறது' என்றார் முலாயம் சிங். லாலு பிரசாத்தும் அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே. பன்சால், "இந்த மசோதா தொடர்பாக முலாயம் சிங் எழுப்பியுள்ள பிரச்னைகளை அரசு கவனத்தில் கொள்ளும், அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கப்படும்' என்றார்.

அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ், "எதிரி சொத்து சட்டத் திருத்த மசோதாவில் இப்போதுள்ள நிலையில் நிறைவேற்றினால்தான் அதற்கு பாஜக ஆதரவு அளிக்கும், திருத்தம் கொண்டு வந்தால் அதனை கடுமையாக எதிர்ப்போம்' என்று கூறினார்.

இந்த மசோதா விஷயத்தில் காங்கிரஸýம், பாஜகவும் இணைந்து செயல்படுகின்றன என்று முலாயம் சிங் குற்றம்சாட்டினார். தொடர்ந்து சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சமாஜவாதி மற்றும் ஆர்ஜேடி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால்  மதியம் 2 மணி வரை ஒரு மணி நேரம் மக்களவை ஒத்தி வைக்கப்பட்டது.

Dinamani