எதிரி சொத்துரிமை அவசர சட்டத்தைக் கைவிட்டது மத்திய அரசு

08/09/2010 10:23

எதிரி சொத்துரிமை அவசர சட்டத்தைக் கொண்டு வரும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது.

 

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

 

பாகிஸ்தான் பிரிவினையின்போது இங்குள்ள சொத்துகளை விட்டுவிட்டு பாகிஸ்தான் சென்றவர்களின் சொத்துகள் தொடர்பாக புதிய அவசரச் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருந்தது.

 

ஆனால் தற்போது அவசரச் சட்டம் கொண்டு வருவதற்கான அவசரம் எழவில்லை எனவும், அடுத்த மக்களவைத் தொடரின்போது இதுதொடர்பாக புதிய மசோதாவைத் தாக்கல் செய்யலாம் எனவும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 

கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிரி சொத்து திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே மசோதாவை அரசு வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.