எரிபொருள் வாங்க பணம் இல்லாததால் சென்னை-மும்பை விமான சேவை வாரத்தில் 2 நாட்களாக குறைப்பு; 60 விமானங்கள் ரத்து

02/06/2011 15:16

 

எரிபொருள் வாங்க பணம் இல்லாததால்  சென்னை-மும்பை விமான சேவை  வாரத்தில் 2 நாட்களாக குறைப்பு;  60 விமானங்கள் ரத்து ஏர்-இந்தியா நிறுவனம் தனது விமானங்களுக்குத் தேவையான எரி பொருளை இந்திய எண்ணை நிறுவனங்களி டம் இருந்து பெற்று வந்தது. இந்த வகையில் எண்ணை நிறுவனங்களுக்கு, ஏர் இந்தியா நிறுவனம் 2700 கோடி ரூபாய் கொடுக்க வேண்டிய துள்ளது. இந்திய எண்ணை நிறுவனங்கள் ஏற்கனவே பெட் ரோல், டீசல், கியாஸ் ஆகியவற்றை குறைந்த விலைக்கு கொடுப்பதால் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. எனவே பாக்கி வைத்துள்ள ரூ.2700 கோடி நிலுவைத் தொகையை கொடுத்தால் தான் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை தர முடியும் என்று எண்ணை நிறுவனங்கள் திட்ட வட்டமாக அறிவித்தன.
 
ஏர்-இந்தியா நிறுவ னம் பல தடவை கேட்டுக் கொண்ட பிறகும், எண்ணை நிறுவனங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வில்லை. பணம் கொடுத்து எரிபொருள் வாங்கிக் கொள்ளுங்கள் என்று உறுதிபட கூறி விட்டது. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமாக 500-க்கும் மேற்பட்ட விமானங்கள் உள்ளன. இந்த விமானங்கள் அனைத்துக்கும் ரொக்கமாக பணம் கொடுத்து எரிபொருள் வாங்க இயலவில்லை. இதனால் பல சேவையை ரத்து செய்யும் நிலைக்கு ஏர் இந்தியா நிறுவனம் தள்ளப்பட்டுள்ளது. இன்று ஏர் இந்தியாவின் 60 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதில் பெரும்பாலான விமானங்கள் லண்டன், டெல்லி, மும்பை, பெங்களூர் நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களாகும்.
 
சென்னையில் இருந்து இயக்கப்படும் ஏர் இந்தியா சேவைகளில் சிறிது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இன்று (வியாழன்) மதியம் டெல்லி செல்ல வேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டது. அந்த விமானத்தில் பயணம் செய்ய முன் பதிவு செய்திருந்த பயணிகள் இன்று மாலை டெல்லி செல்லும் விமானத்தில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தினமும் கொழும்புக்கு இயக்கப்பட்டு வரும் விமானசேவை இனி செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் மட்டும் இயக்கப்படும். சென்னை-மும்பை இடையே தினமும் மாலை 5.45 மணிக்கு ஏர் இந்தியா விமானம் இயக்கப்பட்டு வந்தது. அந்த சேவை இனி செவ்வாய், சனிக்கிழமை 2 நாட்கள் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
60 விமானங்கள் ரத்தானதால் கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் விமானிகள் வேலை நிறுத்தத்தால் வருவாயை இழந்த ஏர் இந்தியா நிறுவனத்துக்கு தற்போதைய இழப்பு கூடுதல் திணறலை ஏற்படுத்தி உள்ளது.

maalaimalar.com