ஐந்தில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிந்து வருகின்றன - ஆய்வு

31/10/2010 14:05

 

11:6. இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்ஃபூல் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன.

 

உலகில் உள்ள 5-இல் ஒரு பங்கு உயிரினங்கள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகின்றன என்று இயற்கைப் பராமரிப்பிற்கான சர்வதேச ஒன்றியம் (ஐ.யு.சி.என்.) தெரிவித்துள்ளது.

பாலூட்டிகள், பறவைகள், நிலம், நீர் இரண்டிலும் வாழும் உயிரினங்கள், ஊர்வன, மற்றும் மீன்கள் ஆகியவை ஐந்தில் ஒரு பங்கு அழிந்து வருகின்றன என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 18ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்ற ஐ.நா. உயிர்ப்பரவல் உச்சிமாநாட்டில் இந்த அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் 192 நாடுகள் பங்கேற்றன.

அதாவது இயற்கை உலகின் முதுகெலும்பாகக் கருதப்படும் உயிரினங்கள் அழிந்து வருவது மனித குலத்திற்கு நல்லதல்ல என்று உயிரினங்கள் பாதுகாப்பு ஆணைய்த்தின் தலைவர் சைமன் ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

சுமார் 3,000 விஞ்ஞானிகள் இணைந்து தயாரித்த 'சிகப்புப் பட்டியலில்' மறைந்து வரும் உயிரினங்களின் வகைகள் கொடுக்கப்ப்ட்டுள்ளது.

அனைத்து பாலூட்டி உயிரினங்களில் 25%, பறவைகளில் 13% , நில/நீர் வாழ் உயிரினங்களில் 41%, ஊர்வனவற்றில் 22%, மீன்களில் 15% அழிந்து வருகின்றன.

இவை அழிந்து வருவதற்கான காரணங்கள் மேலதிகமான வேட்டை அல்லது அவை வாழ்வதற்கான வாழ்விடங்கள் இல்லாமல் போனதே என்று ஐ.யு.சி.என். தெரிவித்துள்ளது.

அதேபோல் அனைத்துத் தாவர் இனங்களிலும் 20% அழிந்து வருகிறது. முதுகெலும்பில்லா உயிரின வகைகளும் முற்றிலும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

நாடுகள் உயிரினப் பராமரிப்பு, இயற்கை அழிவதை அல்லது அழிக்கப்படுவதைத் தடுப்பது ஆகியவற்றை மேற்கொள்ளாவிட்டால் இந்த அழிவுகள் மேலும் 20-% அதிகரிக்கவே வாய்ப்புள்ளது என்று ஸ்டூவர்ட் தெரிவித்துள்ளார்.

ஆனால் சில இடங்களில் அழிந்து வந்த உயிரினங்கள் மீண்டும் வரவழைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்தோனேசியாவில் அழிந்து வரும் ஒரு 6 வகை பறவையினங்கள் மீண்டும் தோன்றி உள்ளன. அவை பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

ஐ.யு.சி.என். சிகப்புப் பட்டியலின் படி சுமார் 25,000 உயிரினங்கள் அழியும் அபாயத்தில் உள்ளன.

தென் கிழக்கு ஆசியாவில்தான் உயிரினங்கள் அழிவு அதிகமாக இருப்பதாக ஐ.யு.சி.என். தெரிவித்துள்ளது. ஏற்றுமதிக்குத் தேவையான எண்ணை வித்துக்களை பயிர்செய்வது உட்பட வணிக ரீதியான கடின மர வெட்டு மற்றும் மரச்சாமான்கள் உற்பத்தி, போற்றி வளர்க்கப்படுவதற்கு மாறாக சுய லாபத்திற்காக நடத்தப்படும் வேட்டைகள் ஆகிய காரணங்களால் தென் கிழக்கு ஆசியப் பகுதிகளில் இயற்கையின் முதுகெலும்பு அழிந்து வருவதாக ஐ.யு.சி.என். தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஏழை நாடுகளில் அழிந்து வரும் உயிரினங்களின் மதிப்பு ஆண்டொன்றிற்கு 2 முதல் 5 டிரில்லியன் டாலர்கள் இருக்கக்கூடும் என்று சுற்றுசூழல் அமைப்பின் பொருளாதாரம் மற்றும் உயிர்ப்பரவல் ஆய்வு தெரிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவின் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தூயநீர் வாழ் உயிரினங்களில் ஐந்தில் ஒரு பங்கு அழிந்து வருகின்ற்ன என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.

ஒரு சில பகுதிகளில் வாழும் பெரும்பாலான் மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இத்தகைய உயிரினங்கள் அழிவது பல கோணங்களிலும் பூமிக்கு நல்லதல்ல என்று ஐ.யு.சி.என். எச்சரித்துள்ளது.