ஐ.நா: இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி: அமெரிக்காவின் நிலையில் மாற்றம் இல்லையாம்

04/12/2010 11:42

 

சென்னை: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி வழங்குவதில் அமெரிக்காவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் டிமோதி ரோமர் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கெல்லாம் பாதுகாப்பு சபையில் இடம் வேண்டுமாம் என்றரீதியில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வெளியிட்ட மோசமான கருத்தை சமீபத்தில் விக்கிலீக்ஸ் இணையத் தளம் அம்பலப்படுத்தியது.

இதையடுத்து அமெரிக்காவுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவிக்கும் என்று எதி்ர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹிலாரியின் மட்டமான கருத்துக்கு கண்டனம் ஏதும் தெரிவிக்காமல் ஆழ்ந்த அமைதி காத்துவிட்டது மத்திய அரசு.

மத்திய அரசின் இந்த அமைதிக்கு கண்டனங்கள் எழுந்ததையடுத்து, அமெரிக்கா தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்துவிட்டதாகவும், அது ஹிலாரியின் தனிப்பட்ட கருத்து என்று அமெரிக்கா கூறிவிட்டதாகவும் மத்திய அரசு கூறியது.

இந் நிலையில் சென்னையில் நிருபர்களிடம் பேசிய அமெரிக்கத் தூதர் டிமோதி ரோமர்,

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் இந்தியப் பயணம், இரு நாடுகளுக்கு இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

ஒபாமா பாகிஸ்தானுக்குச் செல்லாமல், இந்தியாவில் 4 நாள்கள் தங்கி சுற்றுப்பயணம் செய்தார். முன்னாள் அதிபர்கள் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோர் தங்களின் இந்திய வருகையின்போது பாகிஸ்தானுக்கும் சுற்றுப்பயணம் செய்தனர். ஆனால் அதிபர் ஒபாமாவோ, பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை.

தெற்காசியப் பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மையை நிலைநாட்டுவதில் அமெரிக்காவின் தோழனாக இந்தியா விளங்குகிறது. இரு பெரும் ஜனநாயக நாடுகளும் தீவிரவாதத்துக்கு எதிராக தொடர்ந்து கைகோத்துச் செயல்படும்.

ஐக்கிய நாடுகள் சபையை சீரமைக்க வேண்டிய அவசியம் குறித்தும், அதன் பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து தர வேண்டும் என்திலும் அதிபர் ஒபாமா தனது கருத்தை பகிரங்கமாகத் தெரிவித்துவிட்டார். எனவே, இந்த விஷயத்தில் விக்கிலீக்ஸ் இணையதளத்தின் செய்திகளை நம்ப வேண்டாம்.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த போரில் தமிழர்களின் படுகொலைகளுக்கு, அந்நாட்டு அதிபர் ராஜபக்சேதான் காரணம் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியான செய்தி குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை.

போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.149 கோடி வழங்கியுள்ளோம். அங்கு பள்ளிகள், மருத்துவமனைகளை சீரமைத்து வருகிறோம். தமிழர்கள் மீண்டும் தங்களது வாழ்விடங்களில் மறுகுடியேற்றம் பெறச் செய்யும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
oneindia.in