கர்க்கரேயுடன் பேசியதற்கு ஆதாரம் உள்ளது: திக்விஜய் சிங்

14/12/2010 10:48

மகாராஷ்டிரா மாநில பயங்கரவாத தடுப்பு தலைவராக இருந்த ஹேமந்த் கர்க்கரேயுடன் பேசியதற்கு ஆதாரம் உள்ளது என, காங்கிரஸ் தலைவர் திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

 

 

கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்,

2008ம் ஆண்டு நவம்பர் 26ந் தேதி அன்று தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்கு மூன்றரை மணி நேரத்துக்கு முன்பாக, மாலை 6 முதல் 7 மணிக்குள் எனக்கு கர்கரே போன் செய்தார். அப்போது, தனக்கு தொலைபேசி மூலமாக கொலை மிரட்டல் வருவதாக என்னிடம் தெரிவித்தார். மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக இந்து அமைபபுகளை சேர்ந்த சிலரை கர்கரே கைது செய்தபோது அவருடைய நேர்மை குறித்து பலரும் கேள்விகளை எழுப்பியதால் மன நெருக்கடிக்கு ஆளானார். இத்தகைய சூழ்நிலையில், அவர் என்னுடன் டெலிபோனில் பேசிய சிறிது நேரத்தில் கொலை செய்யப்பட்ட தகவல் கிடைத்ததால் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். அவருடைய கொலை குறித்து தீவிர விசாரணை நடத்தினால் பல உண்மைகள் வெளிவரும் என்றார்.


திக் விஜய் சிங் தெரிவித்த கருத்துக்கு பா.ஜனதா கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. காங்கிரஸ் மீது அடுக்கடுக்கான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் மக்களை திசை திருப்பவே கர்கரே கொலைக்கு இந்து அமைப்புகளை தொடர்புபடுத்தி காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் பேசுவதாக பா.ஜனதா கூறியிருந்தது.
 
இது குறித்து காங்கிரஸ் சார்பில் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளர் ஜனார்தன் திவேதி கூறுகையில், கர்கரே கொல்லப்பட்டது குறித்து திக் விஜய் சிங் கூறியவை காங்கிரஸ் கட்சியின் கருத்துகள் அல்ல. மத்திய பிரதேச முன்னாள் முதல்வரான திக் விஜய் சிங்குக்கும், கர்கரேக்கும் இருந்த நீண்ட கால பழக்கத்தின் அடிப்படையில் இருவருக்கும் இடையே கருத்து பரிமாற்றம் நடந்திருக்கலாம். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி சார்பாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என விளக்கம் அளித்தார்.
nakkheeran.in