கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது! -மத்திய அரசு

16/04/2011 18:16

Supreme Courtவெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருப்பவர்களின் பெயர்களை வெளியிட முடியாது என உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்ததுள்ளது. இதனால் உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.


வெளிநாடுகளில் உள்ள வங்கிகளில் இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், விளையாட்டுப் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.

அதன் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் கோடி என்றும் அதை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் முன்னாள் மத்திய சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மேலும், பஞ்சாப் மாநில முன்னாள் போலீஸ் டி.ஜி.பி. கில் உள்ளிட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகளும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இதில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுக்களை நீதிபதி சுதர்சன் ரெட்டி தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்து வருகிறது.

ஏற்கனவே, மராட்டியத்தை சேர்ந்த தொழிலதிபர் ஹசன் அலிக்கு எதிராக கறுப்பு பண வழக்கு தொடரப்பட்டு தீவிர விசாரணை நடைபெறுகிறது.

பெயர் வெளியிட மத்திய அரசு மறுப்பு

இந்த நிலையில், கறுப்பு பணத்தை மீட்கும் வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, மத்திய அரசு சார்பாக சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியன் ஆஜரானார். அவர் வாதிடும்போது, 'இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்தின் படி, வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட தகவல்களை மத்திய அரசு வெளியிட முடியாது' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "இந்தியாவிலிருந்து கறுப்பு பணம் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்தும் வெளிநாட்டு அரசுகளிடம் இருந்தும் பெற்ற தகவல்களை மத்திய அரசால் வெளியிட முடியாது. இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் அதை அனுமதிக்காது.

எனினும், விசாரணை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ள நபர்களின் பெயர்களை வெளியிடுவதில் பிரச்சினை இல்லை.

ஜெர்மனியில் உள்ள லீச்டென்ஸ்டைன் வங்கியில் பணம் போட்டு வைத்துள்ள 6 பேரின் பெயர்களை வெளியிட மத்திய அரசு தயக்கம் காட்டவில்லை. சில நபர்களுக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. ஆனால், மற்றவர்களின் பெயர்களை விசாரணை தொடங்கும் வரை வெளியிட முடியாது," என்றார்.

கடும் அதிருப்தி

கறுப்பு பண விவகாரத்தில் மத்திய அரசு தெரிவித்த இந்த பதிலுக்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

இது குறித்து நீதிபதிகள் கூறுகையில், "வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் போட்டு வைத்துள்ள நபர்களின் பெயர்களை பொதுமக்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிடுவதில் மத்திய அரசுக்கு என்ன சட்ட சிக்கல் இருக்க முடியும்? இது தொடர்பான விளக்கத்தை அடுத்த விசாரணையின் போது மத்திய அரசு கட்டாயம் தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டனர்.

 

ஒன் இந்தியா - தேட்ஸ் தமிழ்