கறுப்புப் பணத்தை மீட்பதில் இந்தியா மெத்தனம்!-விக்கிலீக்ஸ் அசாஞ்ஜே

27/04/2011 10:11

Julian Assangeசுவிஸ் வங்கியில் இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் என்றும், அதுகுறித்து தகவல் தெரிந்தும் பணத்தை மீட்க இந்திய அரசு மெத்தனம் காட்டுகிறது என்றும் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஜே, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.


சுவிஸ் வங்கியில் மற்ற நாடுகளின் பணத்தை விட இந்தியக் கறுப்புப் பணமே அதிகம் உள்ளது. இதனை மீட்க வேண்டும் என பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

இந்த விஷயத்தில் இந்தியாவின் செயல்பாடு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது.

இந்த நிலையில் விக்கிலீக்ஸ் இணையதளம் இந்தியர்களின் கறுப்புப் பண விவரங்கள், கணக்குகள் குறித்து பல தகவல்களை வெளியிட்டு வருகிறது.

இதுகுறித்து கூறிய ஜூலியன் அசாஞ்ஜே, "நாங்கள் வெளியிட்டு வரும் கறுப்பு பணம் விவகாரம் குறித்த தகவல்களில் இந்திய அரசு மட்டும்தான் மெத்தனப் போக்கை பின்பற்றிவருது.

இதே போலே சுவிஸ் வங்கியில் கறுப்பு பணத்தை வைத்திருக்கும் ஜெர்மனி மிக வேகமாக சுவிஸ் வங்கியிலிருந்து அப் பணத்தை மீட்டு வருகிறது.

ஆனால் இந்திய அரசு இந்த விசயத்தில் மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் இன்னும் பலரது கணக்கு விவரங்களை வெளியிடவிருக்கிறோம். எனவே இந்திய மக்கள் நம்பிக்கையோடு காத்திருங்கள். கறுப்புப் பணம் பதுக்கியிருப்போர் பற்றி விவரங்கள் உங்களுக்குத் தெரிய வரும்," என்று அசாஞ்ஜே தெரிவித்தார்.

the one india tamil