கல்லூரி ஆசிரியருக்கான மாநில தகுதித் தேர்வு: மே 14 முதல் விண்ணப்பம் விநியோகம்

18/05/2011 18:01

 

கல்லூரி ஆசிரியருக்கான மாநில அளவிலான தகுதி தேர்வு (எஸ்.இ.டி. -செட்) விண்ணப்பங்கள் மே 14 முதல் வழங்கப்பட உள்ளதாக, பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்தார்.

 

 இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது: பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி.) சார்பில், கல்லூரி ஆசிரியர் பணிக்கான மாநில அளவிலான தகுதித் தேர்வை நடத்துவதற்கு, கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு தேர்வை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தும்.

 

 ÷இதற்கான விண்ணப்பங்கள், மே 14-ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன. பாரதியார் பல்கலைக்கழகம் (www.b-u.ac.in), பல்கலைக்கழக மானியக் குழு (www.ugc.ac.in)  ஆகியவற்றின் இணையதளங்களில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

 

 
விண்ணப்பக் கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு ரூ. 1,000-ம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ரூ. 750-ம், எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 250-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஜூன் 14-க்குள் அனுப்ப வேண்டும்.

 

 
 ஆகஸ்ட் 14-ல் தேர்வு நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, சிதம்பரம், காரைக்குடி, வேலூர், புதுச்சேரி உள்ளிட்ட 10 இடங்களில் சுமார் 50 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.

 

 
முதுநிலை பாடத்தில் தொடர்புள்ள பாடங்களில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் பெற்றவர்கள் தேர்வு எழுதலாம். சுமார் 27 பாடங்களுக்கான தேர்வை எழுதலாம். இப்போது தேசிய தகுதித் தேர்வில் (நெட்) 71 பாடங்கள் உள்ளன. வரும் ஆண்டில் கூடுதலான பாடங்களுக்கு தேர்வை நடத்திக் கொள்ள அனுமதி கேட்க உள்ளோம்.

 

 
அதேபோல ஒவ்வோர் ஆண்டும் இரண்டு தேர்வுகளை நடத்திக்கொள்ள அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதன்படி டிசம்பரில் மீண்டும் ஒரு தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்வு முடிவுகளை 2 மாதங்களுக்குள் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். மாநில அளவில் சுமார் 7,000 கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன என்றார் சி.சுவாமிநாதன்.

தினமணி