கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகள் தகுதியானவர்களா?

04/11/2010 10:14

 

தமிழகத்தில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,025 விரிவுரையாளர் பணி இடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

 பல்கலைக்கழக மானியக்குழுவின் (யு.ஜி.சி.) புதிய உத்தரவுப்படி, விரிவுரையாளர் பதவிக்கு ஸ்லெட் அல்லது நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி அல்லது பி.எச்டி. பட்டம் அவசியம் என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

கல்லூரி விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். கல்வித்தகுதியே போதுமானது என்று யு.ஜி.சி. முன்பு அறிவித்திருந்தது. பழைய விதிமுறைப்படி, 1993-ம் ஆண்டுக்கு முன்பு எம்.பில். முடித்தவர்களுக்கு ஸ்லெட், நெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். தகுதியை அடிப்படை தகுதியாக கொள்ள வேண்டும்.
பி.எச்டி. அல்லது ஸ்லெட், நெட் தேர்ச்சி கட்டாயமாக்கி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள விரிவுரையாளர் பணிநியமன அறிவிப்பினை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஏராளமானோர் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கு விசாரணையின்போது, யு.ஜி.சி. உத்தரவின்படிதான் விரிவுரையாளர் பதவிக்கு தகுதி நிர்ணயிக்கப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ரவீந்திரன், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடமிருந்து ஒப்புதல் தொடர்பாக தனக்கு தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்று கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், விரிவுரையாளர் பதவிக்கு எம்.பில். பட்டதாரிகள் தகுதியானவர்கள்தானா? என்பது தொடர்பாக யு.ஜி.சி. அனுப்பிய தீர்மானத்தின் மீது மத்திய அரசு எடுத்த நடவடிக்கை குறித்து வருகிற 8-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர்.


மேற்கண்ட தேதிக்குள் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றால் விரிவுரையாளர் பணி நியமன அறிவிப்பு ரத்து செய்யப்பட்டு, எம்.பில். கல்வித்தகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். வழக்கு விசாரணை 9-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Nakkheeran.in 

ஆனால் எதிர்காலத்தில் ஸ்லெட், நெட் சான்றிதழ்களோ அல்லது பி.எச்.டி பட்டமோ அவசியம் என்பதால் விரிவுரையாளர் பதவிக்கு செல்லவிரும்பும் மாணவர்கள் அதில் தேர்ச்சிபெற்று சான்றிதழ் பெற்றுக் கொள்வது அவசியம். (NET - National Elegibility Test Exam) visit for more details https://www.ugcnetonline.in/ . (SLET - State Level Eligibility Test Exam) visit for more Details https://www.studentsguide.in/scholarship-for-postgraduates-and-research-scholars/state-level-tests-in-tamil-nadu.html