கல்விக் கடன் வங்கிகளின்: கண்ணாமூச்சி ஆட்டம்

07/09/2010 11:08

உயர்கல்வி படிக்கும் மாணவரா நீங்கள்? உங்கள் வீடு தேடி கல்விக் கடன் வழங்க வங்கிகள் காத்திருக்கின்றன என்று மத்திய அமைச்சர்கள் சந்து, பொந்தெல்லாம் பேசி வருகின்றனர். ஆனால் நடைமுறையில் மாணவர்கள் சந்திப்பது வெறும் கசப்பான அனுபவங்களை மட்டுமே.

 

 

கல்விக் கடன் பெறுவதற்கு ஈடாக சொத்து ஏதும் தேவையில்லை என்று பிரசாரம் செய்யப்படுகிறது.

 

ஆனால் வங்கிகள் அவ்வளவு எளிதாகக் கடன் அளிப்பதில்லை. விதிகளையும் உத்தரவுகளையும் அமல்படுத்துவது அந்தந்த வங்கி கிளை மேலாளரின் கருணையைப் பொறுத்தது. பாவம் போனால் போகட்டும் என்று அவராகப் பார்த்து செய்தால்தான் கடன் கிடைக்கும். சட்டம் பேசினால் அவ்வளவுதான். உன்னால் முடிந்ததைப் பார்த்துக் கொள் என்ற பதில்தான் கிடைக்கும். திறமையான மாணவர்கள் பலர் கல்விக் கடன் கிடைக்காமல் உள்ளனர்.

அப்படியும் கடன் தர முன்வந்தாலும் வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் அரசின் அறிவிப்புக்கு மாறாக உள்ளன.

ஏதோ கிளை மேலாளரின் கருணையால் கடன் கிடைத்துவிட்டாலும் கூட மாதா, மாதம் வட்டி செலுத்த பெற்றோர் நிர்பந்திக்கப்படுகின்றனர். அதைக் காட்டிலும் சில வங்கிகளில் பெற்றோரின் வங்கிக் கணக்கிலிருந்து வட்டிக்கான பணம் மாதா மாதம் தானாகவே பிடித்தம் செய்யப்பட்டுவிடுகிறது. இவையனைத்தும் மத்திய அரசின் அறிவிப்புகளுக்கு மாறாகவே உள்ளது.

2009-10-ம் ஆண்டு முதலே கல்விக் கடனுக்கான வட்டிக்கு மத்திய அரசு மானியம் வழங்கி விடும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் இது வெறும் அறிவிப்போடு இருக்கிறது. வங்கி மேலாளர்களிடம் இதுபற்றி கேட்டால் எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்கின்றனர். இதனால் மாதா மாதம் வட்டியைச் செலுத்த பெற்றோர் நிர்பந்திக்கப்படுகின்றனர். பெற்றோர் வேறு வழியில்லாமல் வட்டி செலுத்தி வருகின்றனர்.

அடுத்ததாக மாதா மாதம் வட்டி தவறாமல் செலுத்தியிருந்தால்தான் மறு ஆண்டுக்கான கல்லூரி கட்டணத்தை அளிக்கமுடியும் என்று வங்கிகள் நிர்பந்திக்கின்றன. ஒருவேளை பழைய தேதியிட்டு வட்டி மானியம் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டால், கட்டிய வட்டித் தொகை திருப்பித் தரப்படுமா என்ற கேள்விக்கும் வங்கித் தரப்பிலிருந்து பதிலில்லை.

தற்போது அடுத்த கல்வி ஆண்டும் தொடங்கிவிட்டது. தற்போதும் இந்த விஷயத்தில் தெளிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தெரியவில்லை. கல்விக் கடனுக்கான வட்டி தொடர்பான செய்திகள் அரசின் பார்வைக்கு கொண்டுவந்த பிறகும் பாராமுகம் காட்டுவது ஏன் எனத் தெரியவில்லை.

எனவே வட்டி மானியம் குறித்து தெளிவான உத்தரவுகளை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான மாணவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதால் வங்கி நிர்வாகங்களும் இது குறித்து நிதி அமைச்சகத்துடன் கடிதத் தொடர்புக் கொண்டு தெளிவு பெற வேண்டும்.

Dinamani