கல்விக் கடன் வங்கிகள் வசூல் செய்திருந்தால் அவை கடன் தொகையில் கழித்து வரவு வைக்கப்படும் -ப.சிதம்பரம்

04/09/2010 11:11

2009-10-ம் ஆண்டில் இருந்து கல்விக் கடன் பெற்ற மாணவர்களிடம் வங்கிகள் வட்டி வசூல் செய்திருந்தால் அவை கடன் தொகையில் கழித்து வரவு வைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார்.

 

செங்கல்பட்டில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்விக் கடன் மேளாவில், மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கி சிதம்பரம் பேசியது:

 

நமது நாட்டில் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள் உயர்கல்வி படிக்க வசதியில்லாமல் பள்ளி படிப்புடன் நிறுத்திக் கொள்ளும் நிலை இருந்தது. இவர்களை கருத்தில் கொண்டே கல்வி கடன் வழங்கும் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

2009-10-ம் கல்வி ஆண்டு மற்றும் அதற்கு பிறகு கல்விக் கடன் பெற்ற  மாணவர்கள், படிக்கும் காலத்தில் வட்டி செலுத்த தேவையில்லை. இது தொடர்பான உத்தரவுகள் அனைத்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு அனுப்பப்பட்டு விட்டன.

 

எந்த வங்கியேனும் 2009-10-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு பிறகு வாங்கிய கடனுக்கு  மாணவர்களிடம் வட்டி கேட்டால் அவர்கள் அருகில் உள்ள கனரா வங்கியை தொடர்பு கொள்ளலாம். அவர்கள்தான் இந்த திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வங்கிகளுக்கு தேவையான விளக்கத்தை கனரா வங்கியைச் சேர்ந்த அதிகாரிகள் அளிப்பர்.

 

அதே சமயத்தில் 2008-09-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய கல்வி ஆண்டுகளில் கல்விக் கடன் பெற்றவர்கள் அனைவரும் வட்டி செலுத்த வேண்டும்.