காவல்துறை மனித உரிமையின் காவலா? அச்சுறுத்தலா? - K. G. பாலகிருஷ்ணன்

29/08/2010 09:56

“காவல் துறையினரின் நடவடிக்கைகளின் காரணமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மனித உரிமைகள் மீறப்படாத ஒரு சூழலை உயர் அதிகாரிகளாகிய நீங்கள் உறுதி செய்ய வேண்டும” என்று தேச மனித உரிமை ஆணைய்த்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காவல்துறையினர் மக்களின் காவலர்களா? அல்லது ஆட்சியாளர்களின் கருவிகளா? என்ற கேள்வி நமது நாட்டு மக்களிடையே நீண்ட காலமாக ஒரு விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. ஏனெனில், மக்களின் பாதுகாவலன் என்ற நிலையில் காவல் துறையினர் செயல்படும் காலம் ஒன்றை இந்தியாவின் எந்த மாநிலத்து மக்களும் இதுவரை அனுபவிக்கவில்லை என்பதே!

உலகில் வேறு எந்த ஜனநாயக நாட்டையும் விட, இந்தியாவில் தான் மனித உரிமை மீறல்களில் அதிகம் ஈடுபடுவது காவல் துறையினராக உள்ளனர் என்பது வெளிப்படையான உண்மையாகும். அதனால்தான், இந்த நாட்டின் தேச மனித உரிமை ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்.

தலைநகர் டெல்லியில், நமது நாட்டின் உள்நாட்டு உளவுத் துறை (இண்டலிஜன்ஸ் பியரூ) சமீபத்தில் ஏற்பாடு செய்த காவல் துறை தலைவர்கள், காவல் தலைமை ஆய்வாளர்கள் மாநாட்டில், முதல் முறையாக தேச மனித உரிமை ஆணையத்தின் தலைவர் உரையாற்ற அழைக்கப்பட்டுள்ளார்.
நீதிபதி பாலகிருஷ்ணனுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த கலந்துரையாடலில், காவல் துறைத் தலைவர்கள் தங்கள் அனுபவத்தின் அடிப்படையில் பல கேள்விகளைக் கேட்டுள்ளனர் என்றும், அதற்கெல்லாம் நீதிபதி பாலகிருஷ்ணன் உரிய விளக்கங்கள் அளித்ததாகவும் செய்திகள் கூறுகின்றன.
இந்த மாநாட்டில் பேசிய நீதிபதி பாலகிருஷ்ணன், காவல் துறையினருக்கு அளித்துள்ள பல யோசனைகள், காவல் துறைத் தலைவர்களால் முழுமையாக பின்பற்றப்படுமானால், அது உண்மையிலேயே நமது நாட்டின் சமூகச் சூழலில், ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என்பதில் ஐயமில்லை.

“சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்ற உணர்வோடு தங்களுக்கு கீழ் பணியாற்றும் அதிகாரிகளும், காவலர்களும் நடந்து கொள்வதை மூத்த அதிகாரிகள் உறுதி செய்தால், அதுவே மனித உரிமை மீறல்களுக்கு எதிரான பாதுகாப்பாக அமையும்” என்று நிதிபதி பாலகிருஷ்ணன் கூறியிருப்பது மிக முக்கியமானது.

இங்கே சட்டத்தின் ஆட்சி என்று கூறியிருப்பது, இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தின் ஆட்சி என்பதை காவல் துறையினரில் எத்தனை பேர் புரிந்துகொண்டிருப்பார்கள் என்பது கேள்விக்குறியே! சட்டத்தின் ஆட்சி என்றால், தங்களுக்குள்ள அதிகாரத்தை உச்சக்கட்ட அளவிற்குப் பயன்படுத்துவது என்ற புரிதல்தான் காவல் துறையிலுள்ள பெரும்பான்மையாளர்களுக்கு உள்ளது என்பதை அவர்களின் பேச்சிலும், மக்களுடனான அவர்களின் அணுகுமுறையிலும் வெகுவாக புலப்படுகிறது.

நமது நாட்டின் காவல் துறையினரின் பொதுவான மனப்பாங்கு, வெள்ளையன் காலத்து காலனி ஆதிக்க அரசில் பணியாற்றிய காவலர்களின் மனப்பாங்கோடுதான் இப்போதும் தொடர்கிறது. தங்களைக் கண்டு மக்கள் அஞ்சி, அடங்கி இருக்க வேண்டும் என்பதை மிரட்டலான நடத்தையின் மூலம் இன்றளவும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதேபோல், வெள்ளை துரைமார்களுக்கு எப்படி அதீத மரியாதை காட்டி நடந்துகொண்டார்கள் என்று சினிமாவில் பார்க்கிறோமா, அதேபோல்தான் இன்றளவும் ஆட்சியாளர்களுக்கு அதீத மரியாதை கொடுத்து நடந்துகொள்கிறார்கள். ஆட்சி மாறினால், அவர்களும் தங்களது மரியாதைகளை மாற்றிக் கொள்கிறார்கள். அது எந்த அளவிற்கு செல்லும் என்பதை முன்னாள் முதல்வர் ஒருவர் கைது செய்யப்பட்டபோது அந்தப் ‘பணி’யை நிறைவேற்றிய காவல் அதிகாரிகள் நடந்துகொண்டதே அதற்கு அத்தாட்சியாகும்.

நாம் இன்னமும் ஒரு விடுதலை பெற்ற நாட்டின் குடிமக்களாகவில்லை என்பதை பல நேரங்களில் நிரூபிப்பவர்கள் காவல் துறையினரே. சமீபத்தில் திருவள்ளுவர் மாவட்டம் திருப்பெரு்ம்புதூரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்காக தங்கள் நிலங்களை கையகப்படுத்தும் அரசின் நடவடிக்கையை எதிர்த்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற மக்கள் மீது, அவர்கள் போக்குவரத்திற்கு இடையூறு செய்கிறார்கள் என்று கூறி காவல் துறையினர் நடத்திய தடியடித் தாக்குதல்!

இதேபோல், தஞ்சை மாவட்டம் வடசேரி கிராமத்து மக்கள் தங்கள் ஊரின் வேளாண்மைக்கு வேட்டு வைக்கும் வகையில் அமையவிருந்த எரிசாராய தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு வந்தபோது ஏற்பட்ட ஒரு சிறு சம்பவத்தை சாக்காக வைத்து, பெரியவர்கள், பெண்கள் என்று பாராமல் காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் மீது காவல் துறையினர் நடத்திய தடியடித் தாக்குதல். இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளரே ‘தலைம’யேற்றநடத்தி முடித்ததுதான் வேதனையான வேடிக்கை!

அதே நேரத்தில், ஜெயலலிதா மீதான சொத்து சேர்ப்பு வழக்கில், அவர் வாய்ந்த வாங்கி இழுத்தடிக்கிறார் என்று கூறி, ஆளும் கட்சியான தி.மு.க., சென்னை சைதாப்பேட்டை, மறைமலையடிகளார் பாலத்திற்கருகே பெரும் ஆர்ப்பாட்ட்த்தை நடத்தினர். அதனால் போக்குவரத்து சாலையின் ஒரு திசையில் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. அதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் தடுக்கப்படவில்லை. மாறாக, போக்குவரத்து பாதை மாற்றி விடப்பட்டது.

தங்கள் வாழ்விற்கு ஆதாரமான நிலம் பறிக்கப்படுவதை ஏற்காமல் மனு கொடுக்க வந்தவர்கள் மீது தாக்குதல். ஆனால், ஆளும் கட்சியினர் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தால், போக்குவரத்து பாதை மாற்றிவிடப்படுகிறது!

இதைத்தான் அந்த மாநாட்டில் பேசிய நீதிபதி பாலகிருஷ்ணன் அவர்களும், “காவல் துறையினர் மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும். இந்தியாவைப் போன்ற ஒரு ஜனநாயக நாட்டிற்கு ஜனநாயக (பண்புடன் கூடிய) காவல் துறை தேவைப்படுகிறது. ஜனநாயகக் காவல் என்பது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற காவல் என்ற அடிப்படையைக் கொண்டது. மக்களை அனைவரையும் சமமாகவும், பாதுகாப்புடன் நடத்துவதென்பதே சட்டத்தின் ஆட்சி என்பதன் பொருளாகும்” என்று கூறியுள்ளார்.
தனது மாநாட்டு உரையில் நீதிபதி பாலகிருஷ்ணன் இரண்டு முக்கிய விடயங்களில், காவல் துறையினர் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். ஒன்று, என்கவுண்டர் என்றழைக்கப்படும் மோதல் கொலைகள். இரண்டு, விசாரணை மரணங்கள்.

பொதுவாக என்கவுண்டர் என்பதை நமது நாட்டின் காவல் துறையினர், குறிப்பாக அதிகாரிகள் ஒரு பெருமையாகவே கருதுகிறார்கள். கிரிமினல்களைத்தானே என்கவுண்டர் செய்கிறோம், அதில் என்ன சிறுமை உள்ளது என்று கூறுகிறார்கள். சமூகத்திற்கும், சட்டத்தின் ஆட்சிமைக்கும் எதிரானவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டியதுதான் காவல் துறையின் கடமையே தவிர, குற்றவாளிகள் என்று எந்த ஒரு நபரும் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்படுவதற்கு முன்னர், கொல்லப்படுவது தண்டனையாகாது. மாறாக, அது படுகொலையே. இதை உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் கூறியுள்ளது. என்கவுண்டர் நடந்தது என்று காவல் துறை கூறினால், அது நிகழ்ந்த இடத்தின் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற சட்ட ரீதியான கட்டாயம் உள்ளது. ஆனால் அப்படி நடந்ததாகத் தெரியவில்லை.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் போலி என்கவுண்டர்களில் 212 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று தேச மனித உரிமை ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்று நீதிபதி பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது ஒரு ஜனநாயக நாட்டிற்குரிய புள்ளிவிவரம் ஆகாது!

காவல் விசாரணை மரணங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.இது காவல் விசாரணையில் மனித உரிமைகள் தொடர்பான வரையறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதையே காட்டுகிறது. காவல் விசாரணை என்பதே தங்களிடம் அகப்பட்டவனை ஒரு குற்றவாளி என்ற முடிவுடனேயே நடத்தப்படும் ஒரு நடவடிக்கையாக இருக்கிறது.

இந்நிலைகள் மாறாவிட்டால், காவல் துறை என்பது மக்களை அச்சுறுத்தும் துறையாகவே இருக்கும்.அப்படிப்பட்ட ஒரு நிலை இந்த நாட்டில் நீடிக்குமானால், அரசியல்வாதிகளைப் போல் காவல் துறையும் மக்களிடமிருந்து அந்நியப்பட்டுவிடும்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, காவல் துறைச் சீர்திருத்தம் தொடர்பாக நீதிபதி ஒய்.வி.சந்திரசூட் அளித்துள்ள பரிந்துரைகளின்படி, ‘மக்கள் காவல் துற’ உருவாக வேண்டும். அதற்கான முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். ஈடுபடுவார்களா?

thanks to webdunia