காஷ்மீரின் சில பகுதிகளில் ஆயுதப் படை சட்டம் ரத்து: ஒமர்

24/10/2011 09:58

காஷ்மீரின் சில பகுதிகளில் ஆயுதப் படை சட்டம் ரத்து: ஒமர்

நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த காவல்துறையினரை நினைவுகூரும் விதமாக ஸ்ரீநகரையடுத்த ஜேவான் ஆயுதப் படை போலீஸ் வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நி

 

ஸ்ரீநகர், அக். 21: அடுத்த ஒரு சில நாள்களுக்குள் ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம், பதற்றமான பகுதிகளுக்கான சட்டம் ஆகியன ரத்து செய்யப்படுமென அந்த மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

 

நாட்டுக்காக உயிர்நீத்த காவல்துறையினரை நினைவுகூரும் நிகழ்ச்சி ஸ்ரீநகரையடுத்த ஜேவான் என்னுமிடத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ஒமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது:

 

இந்தச் சட்டங்களை விலக்கிக் கொள்வதால் கடும் விளைவுகள் ஏதும் ஏற்படாது. மாறாக, மாநில காவல்துறையினருக்கும் துணை ராணுவப் படையினருக்கும் பொறுப்பு கூடுதலாகும். இந்தச் சட்டங்களை நீக்குவதற்கான நேரம் வந்துவிட்டது. இவை தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காக ஜம்மு காஷ்மீரில் கொண்டுவரப்பட்டது.

 

எந்தெந்தப் பகுதிகளில் இந்தச் சட்டங்கள் விலக்கிக்கொள்ளப்படும் என்பதை தெரிவிக்கும் நிலையில் நான் இல்லை.

 

ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் நிலைமை மேம்பட்டிருக்கிறது. சில பகுதிகளில் தீவிரவாதம் முடிவுக்கு வந்துள்ளது.

 

கடந்த ஆண்டு மோதலில் இறந்த பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் எண்ணிக்கை குறைந்ததிலிருந்து நிலைமை மேம்பட்டிருப்பதை உணர முடியும்.

 

நாடு முழுவதும் மோதல்களால் இறந்த 635 போலீஸôரில் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் 18 பேர்தான். மிகச்சிறிய மாநிலமான தில்லியில் 15 போலீஸôர் இறந்தனர். ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீராகி வருவதற்கு இவையெல்லாம் அறிகுறிகள்.

 

கடந்த 3 ஆண்டுகளாக நான் ஒன்றைக் கற்றுக்கொண்டிருக்கிறேன். இன்றைக்கு நன்றாக இருக்கிறது என்பதற்காக நாளையும் நன்றாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது என்பதுதான் நான் கற்ற பாடம்.

 

2011-ம் ஆண்டைக் காட்டிலும் 2012-ம் ஆண்டு சிறப்பாக அமைய நாம் கடுமையாக உழைக்க வேண்டும்; காவல்துறையும் நிர்வாகமும் அதனை உறுதி செய்ய வேண்டும். காவல்துறை - பொதுமக்கள் சந்திப்பு, திறமையுள்ளவர்களைக் கண்டறியும் திட்டம், தொழிற்பயிற்சி முகாம்கள் ஆகியவற்றை நாம் தொடர்ந்து நடத்த வேண்டும் என்றார் ஓமர் அப்துல்லா.

dinamani.com