காஷ்மீரில் பெரும் கலவரம்-துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பலி

19/08/2010 20:21

காஷ்மீரில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கலவரம் மேலும் பரவாமல் தடுக்க பாதுகாப்புப் படையினர் போராடி வருகின்றனர்.

கடந்த ஜூன் 11ம் தேதி மூண்ட கலவரத்திற்கு சிறுவனையும் சேர்த்து 60 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மிலத் அகமத் தர் என்ற அந்த சிறுவன் அனந்தநாக் மாவட்டம், ஹர்னாக் கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த மோதலின்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தான். தனது வீட்டுக்கு முன்பாக தனது நண்பர்களோடு நின்று கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிக் குண்டு பட்டு காயமடைந்தான். இன்று அவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

இதுகுறித்து கிராமத்தினர் கூறுகையில், இந்த சிறுவன் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை. வீட்டுக்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது பாய்ந்து வந்த குண்டு பட்டு காயமடைந்து உயிரைப் பறி கொடுத்துள்ளான் என்றார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், எங்கிருந்து துப்பாக்கிக் குண்டுகள் வருகின்றன என்றே தெரியவி்ல்லை. இதன் காரணமாக அப்பாவிகளின் உயிர்கள்தான் தொடர்நது பறிபோய்க் கொண்டுள்ளன. இதுதான் காஷ்மீரிகளின் இன்றைய நிலை என்றார் சோகத்துடன்.

சிறுவனின் மரணச் செய்தி பரவியதும் தெற்கு காஷ்மீரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. உடனடியாக கொய்மா, அனந்தநாக் நகர்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஸ்ரீநகரிலும், வடக்கு காஷ்மீரின் சோபூர் நகரிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பாரமுல்லா, ஹந்த்வாரா, குப்வாரா, புலவாமா பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதம் 11ம் தேதி முதல் காஷ்மீர் பள்ளத்தாக்கு ரத்தக்களறியாகியுள்ளது. தொடர் கலவரம், போராட்டங்கள், ஊரடங்கால் பள்ளத்தாக்கே போர்க்களம் போல காணப்படுகிறது.