காஷ்மீரில் மனித உரிமை மீறலை தடுக்க இந்தியா போதிய நடவடிக்கை :ஐ.நா., பொதுச் செயலர் பாராட்டு

18/12/2010 22:39

"காஷ்மீரில் நடக்கும் வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கு, இந்திய அரசு போதிய நடவடிக்கைகள் எடுத்து வருகிறது' என, ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் கூறியுள்ளார்.

 

காஷ்மீரில் பாதுகாப்பு படையினரால், கைதிகள் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக, "விக்கிலீக்ஸ்'இணையதளத்தில் தகவல் வெளியானது. காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில், கைது செய்யப்படுவோரிடம், உண்மைகளை வரவழைப்பதற்காக, பாதுகாப்பு படையினர் அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. செஞ்சிலுவை சங்கத்தை சேர்ந்தவர்கள், இந்தியாவுக்கான அமெரிக்க தூதரிடம் தெரிவித்த விவரங்களில் இந்த தகவல் இடம் பெற்றுள்ளதாக, விக்கிலீக்ஸ் இணையதளம் தெரிவித்து இருந்தது.இந்நிலையில், ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 

அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து, அவர் கூறியதாவது:காஷ்மீர் பிரச்னை குறித்த அனைத்து விவகாரங்கள் பற்றியும், இந்தியா - பாகிஸ்தானைச் சேர்ந்த அதிகாரிகள் விரிவாக ஆலோசனை நடத்தியுள்ளனர். பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காணப்படும் என்ற, நம்பிக்கையுள்ளது.காஷ்மீரில் வன்முறையை தடுப்பதற்கும், அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கும் தேவையான அனைத்து அத்தியாவசிய நடவடிக்கைகளையும் இந்தியா எடுத்து வருகிறது. இதுகுறித்து, இந்திய அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.இவ்வாறு பான்-கீ-மூன் கூறினார்.

 

இந்தியா வலியுறுத்தல்:இதற்கிடையே, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு கூட்டம் நேற்று நடந்தது.

 

இதில், ஐ.நா.,வுக்கான இந்திய தூதர் ஹர்தீப் சிங் புரி பேசியதாவது:உலகின் பல்வேறு பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஐ.நா., அமைதி காக்கும் படையினர், பாதுகாப்பு பணியிலும், நிவாரண பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த அமைதி காக்கும் படையில், இந்திய வீரர்கள் அதிகமாக இடம் பெற்றுள்ளனர். இருந்தாலும், அவர்களுக்கு தேவையான வசதிகள் கிடைக்கவில்லை. ஆனால், அவர்களுக்கான பணிச்சுமை அதிகமாக உள்ளது. எனவே, அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினருக்கு போதிய வசதிகளை செய்து தர வகை செய்யும், விதிமுறைகளை உருவாக்க வேண்டும்.இவ்வாறு ஹர்தீப் சிங் கூறினார்.

dinamalar.com