காஷ்மீர் எம்.எல்.சி. தேர்தலில் கட்சி மாறி ஓட்டு-11 பாஜக எம்எல்ஏக்கள் கூண்டோடு ராஜினாமா

16/04/2011 18:21

காஷ்மீர் மாநிலத்தில் 6 மேல்சபை (எம்.எல்.சிக்கள்) உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடந்தது. எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் இந்தத் தேர்தலில் 6 இடங்களில் 5 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது.

பாஜக சார்பில் நிறுத்தப்பட்ட ஒரே வேட்பாளரான ரஞ்சித் சிங்குக்கு 4 ஓட்டுகளே கிடைத்தன. ஆனால் பாஜகவுக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களில் 7 பேர் கட்சி மாறி ஓட்டுப் போட்டுள்ளனர்.

இதனால் தான் பாஜக வேட்பாளர் வெறும் 4 ஓட்டுகள் மட்டும் பெற்றுள்ளார். தங்களது எம்எல்ஏக்கள் கட்சி மாறி ஓட்டுப்போட்ட விவகாரம் பாஜக தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்த பாஜக மேலிடம் அவர்களை டெல்லிக்கு வருமாறு உத்தரவிட்டது.

இந் நிலையில் காஷ்மீர் மாநில பாஜக எம்.எல்.ஏக்கள் 11 பேரும் நேற்றிரவு கூண்டோடு ராஜினாமா செய்தனர். ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கும், கட்சியின் பொதுச் செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

கட்சி மாறி ஓட்டுப் போட்டவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வசதியாக 11 பேரும் ராஜினாமா செய்திருப்பதாக சட்டமன்ற பாஜக துணைத் தலைவர் ஜுகால்கிஷோர் சர்மா கூறி்யுள்ளார்.

 

ஒன் இந்தியா தமிழ்