குஜராத் கலவர வழக்கு-இறுதி அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிப்பு

27/04/2011 10:37

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை சிறப்பு புலனாய்வுக் குழு, உச்சநீதிமன்றத்தில் இன்று (25-04-2011) சமர்ப்பித்தது.


இந்த அறிக்கை மீதான விசாரணையை புதன்கிழமை உச்சநீதிமன்றம் தொடங்குகிறது. மேலும், இந்த விசாரணையுடன், கலவரத்தில் கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. ஈசான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி தாக்கல் செய்துள்ள மனுவும் விசாரிக்கப்படவுள்ளது.

முன்னதாக 2002ல் நடந்த குஜராத் கலவரத்தின்போது ஜாப்ரி கொடூரமாகக் கொல்லப்பட்டது குறித்து சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜாகியா உச்சநீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து முன்னாள் சிபிஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவை உச்சநீதிமன்றம் அமைத்தது.

ஜாகியா தாக்கல் செய்திருந்த வழக்கில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும், அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்கள், காவல்துறையினர், மூத்த அதிகாரிகள் உள்பட 62 பேரும் சேர்ந்துதான் இந்தக் கலவரத்தைத் தூண்டி விட்டனர். கலவரத்தை அடக்காமல் அதை வேடிக்கை பார்த்தனர். இதன் காரணமாகவே எனது கணவர் உள்பட 1000 பேர் கொடூரமாகக் கொல்லப்பட நேரிட்டது.

2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில், வேண்டும் என்றே மாநில அரசு காவல்துறையை செயல்பட விடாமல் தடுத்து விட்டது. இதன் காரணமாக பல அப்பாவிகளின் உயிர்கள் பறிபோயின. பொதுச் சொத்துக்கள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டன என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து விசாரித்த எஸ்ஐடி தற்போது தனது இறுதி அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளது. அறிக்கையை எஸ்ஐடி தலைவரான ஆர்.கே.ராகவன் தாக்கல் செய்தார்.

ஜாகியாவின் கணவரான ஈசான் ஜாப்ரி உள்பட 69 பேர் குல்பர்கா சொசைட்டியில் ஒரு கும்பலால் மிகக் கொடூரமாக தீவைத்து உயிரோடு கொளுத்தப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.

எஸ்ஐடி மீது சரமாரி புகார்

இந்த நிலையில் மூத்த காவல்துறை அதிகாரியான சஞ்சீவ் பட், எஸ்ஐடி மற்றும் அதன் தலைவர் ராகவன் மீது குற்றம் சாட்டி உச்சநீதிமன்றத்தில் ஒரு அபிடவிட் தாக்கல் செய்துள்ளார். அதில்,

விசாரணையை முழுமையாக ஆர்.கே.ராகவனும், எஸ்ஐடியும் மேற்கொள்ளவில்லை. பல விஷயங்களில் அவர்கள் சமரசம் செய்து கொண்டனர். நீக்குப் போக்காக நடந்து கொண்டனர் என்று சதீஷ் பட் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நான் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த பல முக்கிய ஆதாரங்கள், தகவல்களை எஸ்ஐடி பரிசீலிக்கவே இல்லை. மேலும் எஸ்ஐடி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நான் பலமுறை முயன்றேன். ஆனால் அதற்கு எனக்கு அனுமதி கிடைக்கவில்லை.

எனவே எஸ்ஐடி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் கொடுத்த ஆதாரங்களையும், ஆவணங்களையும் எஸ்ஐடி பரிசீலிக்கவே தயாராக இல்லை.

2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி முதல்வர் நரேந்திர மோடி தனது வீட்டில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தின்போது நானும் அங்கு இருந்தேன். கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அந்தக் கூட்டத்தை மோடி கூட்டியிருந்தார். அப்போது மோடி அதிகாரிகளிடம் கூறுகையில், இந்துக்கள் தங்களது கோபத்தைக் காட்டுவதை தடுக்க முயல வேண்டாம். அதன் மூலம் இனிமேல் கோத்ரா சம்பவம் போல ஒன்று இந்த மாநிலத்தில் நடைபெறாமல் நாம் தடுக்க முடியும் என்று கூறினார் என்று கூறியிருந்தார் பட்.

இஷ்ரத் என்கவுன்டர் வழக்கு-எஸ்ஐடி தலைவர் விலகினார்

இதற்கிடையே, இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை விசாரிக்க குஜராத் உயர்நீதிமன்றம் அமைத்த எஸ்ஐடியின் தலைவராக இதுவரை செயல்பட்டு வந்த கர்னைல் சிங் அப்பொறுப்பிலிருந்து விலக குஜராத் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதேசமயம், குழு உறுப்பினர்களில் ஒருவரான மூத்த ஐபிஎஸ் அதிகாரி சதீஷ் வர்மா சுதந்திரமாக செயல்படலாம் என்றும் அது அனுமதித்துள்ளது.

தான் சந்தேகப்படும் நபர் எவராக இருந்தாலும், அவர் மீது உரிய ஆதாரங்கள் இருந்தால் கைது கூட செய்யலாம் என்றும் அது அனுமதி அளித்துள்ளது.

எஸ்ஐடி தலைவராக இருந்து வந்த கர்னைல் சிங், மிஸோரம் மாநிலத்திற்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளார். இதனால் தன்னால் தொடர்ந்து எஸ்ஐடி தலைவராக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதையடுத்து அவர் விலக அனுமதித்தது உயர்நீதிமன்றம்.

எஸ்ஐடியில் மொத்தம் மூன்று பேர் உள்ளனர். அவர்களில் தற்போது கர்னைல் சிங் போய் விட்டார். மீதமுள்ள இருவரில் ஒருவரான வர்மா இஷ்ரத் ஜஹான் வழக்கை முழுமையாக விசாரிப்பார். இன்னொருவரான மோகன் ஜா, எஸ்ஐடியின் நிர்வாகப் பணிகளைக் கவனிப்பார் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

one india tamil