குஜராத் கலவரத்தால் பயங்கரவாதி ஆனேன்: ஹெட்லி

14/06/2011 11:49

குஜராத் கலவர விடியோ காட்சிகளால் பயங்கரவாதி ஆனதாக லஷ்கர்-இ-தொய்பாவைச் சேர்ந்த டேவிட் ஹெட்லி சிகாகோ நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட அந்த விடியோ காட்சிகளை எனக்கு அடிக்கடி காண்பித்தார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

மும்பை தாக்குதல் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான அமெரிக்கவாழ் பாகிஸ்தானியர் டேவிட் ஹெட்லி மீது சிகாகோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

மும்பை தாக்குதலில் லஷ்கர்-இ-தொய்பா, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.க்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக நீதிமன்றத்தில் அவர் ஏற்கெனவே வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இந் நிலையில், லஷ்கர்-இ-தொய்பா தங்களது இயக்கத்துக்கு ஆள் சேர்ப்பது குறித்து நீதிமன்றத்தில் அண்மையில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

"லஷ்கர் அமைப்பின் தலைமையிடமான பாகிஸ்தானின் முஸôபராபாத் நகரில் நடைபெற்ற பயங்கரவாத முகாமில் கலந்து கொண்டேன். அப்போது, 2002-ல் நடைபெற்ற குஜராத் கலவர விடியோ காட்சிகளை காண்பித்து என்னைப் போன்றோரை இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டினார்கள்.

 

குஜராத்தில் மக்கள் உயிரோடு எரித்துக் கொல்லப்படுவதையும், வீடுகள் தீக்கிரையாக்கப்படும் காட்சிகளும் எனது மனதைப் பாதித்தது.

 

 விசுவ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த பாபா பஜ்ரங்கி என்பவரின் பேச்சை ரகசியமாக படம் பிடித்த விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். அதில், ஏராளமான முஸ்லிம் பெண்களைக் கொன்றதாகவும், வீடுகளுக்கு தீ வைத்ததாகவும் பாபா பஜ்ரங்கி கூறுகிறார்.

 

பாபர் மசூதி இடிப்பு விடியோ காட்சிகளையும் காண்பித்தார்கள். பல வாரங்களாக அந்த விடியோ காட்சிகளை மட்டுமே ஒளிபரப்பினார்கள்.

 

ஒவ்வொரு விடியோவும் முடிந்த பின்னரும் அது குறித்து விவாதித்து இந்தியாவுக்கு எதிராக செயல்படத் தூண்டினார்கள்' என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு பலமுறை வந்துள்ள டேவிட் ஹெட்லி, மும்பையின் முக்கிய பகுதிகளை வேவு பார்த்து நகரின் வரைபடங்கள், விடியோ, புகைப்படங்களை லஷ்கர் இயக்கத்துக்கு அனுப்பினார்.

 

அதன் அடிப்படையிலேயே மும்பை மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது நினைவுகூரத்தக்கது.

dinamani.com