சமுதாய அரசியல் ஒரு பார்வை

14/03/2011 08:18

 

அபு அஸ்ஃபா - புதுவலசை

இந்தியாவின் சுதந்திரத்திற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் பாடுபட்ட நம் சமுதாயம். இந்திய விடுதலைக்குப்பிறகு ஏற்பட்ட பல்வேறு அடக்குமுறைகளுக்கு மத்தியில் நம்முடைய உரிமைகளை நிலைநாட்ட பெரிதாக எதுவும் செய்துவிடவில்லை என்றாலும் அரசியலிலாவது நிலைநாட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியா சுதந்திரத்திற்குப் பிறகு முஸ்லீம்களின் ஒரே அரசியல் இயக்கமாக துவங்கப்பட்டதுதான் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் என்ற அரசியல் கட்சி, காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்களால் தோற்றுவிக்கப்பட்டு அவர் காலம் வரை முஸ்லீம்களுக்காக சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றங்களில் சமுதாய உரிமைகளுக்காக போராடினர். அந்தக் காலகட்டத்தில் இருந்த ஆதிக்கப் போக்கால் நம்முடைய குரல் பெரும்பாலும் எடுபடாமலேயே போய்விட்டது. அதன் பின் தலைவர்களின் மாற்றம் அந்தக் கட்சியின் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டுவிட்டது. இன்று அந்தக் கட்சியின் தமிழகத்தின் நிலையை நாம் சொல்லித் தெறிய வேண்டியதில்லை.....

 

அதன் பின் 1990 களில் பாபர் மசூதி இடிப்பு என்ற துயர சம்பவம் பல கேள்விகளை முன்வைத்தது. இந்த சமூகம் பாதிக்கப்பட்டால் ஜனநாயக அடிப்படையில் போராடக் கூட யாரும் இல்லையா? முஸ்லீம்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்பட்டும் கூட அதை தட்டிக்கேட்க நாதியில்லையா? என்ற கேள்வி இந்தியா முழுவதும் எழுந்தது. அதன் பின்தான் இயக்கங்களின் தோற்றம் தமிழகத்திலும் மற்ற மாநிலங்களிலும் உருவானது. பல இயக்கங்கள் தவறான கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கவும் செய்தது. சில இயக்கங்கள் அரசியல் களம் கண்டுள்ளது இன்னும் ஒரு சில இயக்கங்கள் மட்டும் அரசியல் சாராமல் நின்கிறது.

 

தமிழகத்தை பொருத்தவரை முஸ்லீம் லீக், தேசிய லீக், இந்திய தேசிய லீக், மமக, சஜக இன்னும் சில அரசியல் கட்சிகள் சமுதாய அரசியல் கட்சிகளாக இருக்கிறது. அதில் சீட் வாங்கும் அளவுக்கு உள்ள இரண்டு கட்சிகள் இரண்டு அணிகளிலும் இருந்து கொண்டு தலா 3 சீட்டுக்களை பெற்றுள்ளது, ஒரு சில கட்சிகள் தனித்துப் போட்டி என்றும் அறிவித்துள்ளது.

 

சமுதாய அரசியல் பேசுபவர்கள் பெரும்பாலும் ஒற்றுமை வாதிகளாகாக மக்கள் மத்தில் வலம் வருகின்றனர். ஒற்றுமையை பேசாத அரசியல் கட்சிகளே கிடையாது. ஆனால் எல்லோரும் தம் தலைமையில் சமுதாயம் ஒன்று சேர வேண்டும் என நினைக்கிறார்களே தவிர ஒற்றுமைப்படுத்தியதாக தெறியவில்லை.

 

சமுதாய அரசியலின் நோக்கம்

முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க, சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றங்களில் சமுதாயத்திற்காக குரல் கொடுக்க மற்றும் நம்முடைய பிரதிநிதித்துவத்தை நிலைநாட்ட போன்ற காரணங்கள் உண்டு. அதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. கல்வி, வேலைவாய்ப்பைப் போல் நம் சமுதாயம் அரசு அதிகாரங்களிலும் பின் தங்கியே இருக்கிறது. ஆனால் இந்தக் கருத்தை வழியுறுத்தி ஒட்டு மொத்த சமூக மக்களின் கவனத்தையும் அரசியலின் பக்கம் திருப்பும் இந்த அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகள் தவறானவை.

 

ஒரு சமுதாயத்தை பாதுகாக்க எத்தனை அரசியல் கட்சி, ஒவ்வென்றுக்கும் தனித்தனி நிலைபாடு என்று வேறுபட்டு நிற்கிறது. இவையைல்லாம் சமுதாய அரசியல் என்ற வாதத்தையை பொய்யாக்கும் வண்ணம் உள்ளது. மக்கள் கூட்டத்தை பார்த்து விட்ட தலைவர்களின் அரசியல் ஆசையாகவே இன்றைய அரசியல் கட்சிகள் உருவாகியுள்ளன. சமுதாய அரசியல் என்பதெல்லாம் சமூக மக்களின் ஆதரவைப் பெறத்தானே தவிர சமுதாயத்திற்கான அரசியல் என்று சொல்ல முடியாது. அப்படி இவர்கள் சமூக அரசியல் செய்வதாக இருந்தால் குறைந்தது அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து 10 சீட்டாவது கேட்டுப் பெற்றிருக்க முடியும்.

 

அரசியல் மட்டும் தான் தீர்வா?

இன்றைய அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைப் பார்த்தால் சமுதாய முன்னேற்றத்திற்கு அரசியல் மட்டும் தான் தீர்வு என்று மக்களை நம்பவைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெறிகிறது. அரசியல் தீர்வும் தேவையே தவிர அரசியல் மட்டுமே தீர்வாகிவிட முடியாது. எங்கள் கட்சியல் இணைந்து கொள்ளுங்கள் என்று தெருக்குத் தெரு ஒரு மின் கம்பம் விடாமல் எழுதி வைத்துக் கொண்டு இளைஞர்களை அரசியல்வாதிகாளாக்க துடிக்கின்றனர்.

 

எந்த சமுதாயமும் பள்ளி மாணவர்களை அரசியல் களத்திற்கு அழைத்தாக தெறியவில்லை சில மதவாத அமைப்புகளைத் தவிர. ஆனால் இன்று நம் சமுதாய இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் அரசியல் கட்சிகளுக்கு பிரச்சாரர்களாகவும், கட்சிக்கு கொடிகட்டி போஸ்டர் ஒட்டுபவர்களாகவும் மாறி வருகின்றனர். எந்த பெற்றோரும் தன் மகனை ஒரு அரசியல்வாதியாக்கிப் பார்க்க விரும்பமாட்மார்கள் ஆனால் சமுதாயம் என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்த அவலம் நடந்தேறிவருகிறது. பள்ளி தேர்வுகள் துவங்கிவிட்டது இந்த நேரத்தில் அரசியல் நிலைபாடுகளும், அரசியல் கட்சிகளின் நடவடிக்கைகளும் தேர்வை பாலாக்கிவிடுமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

 

எந்த ஒரு சமுதாயம் கல்வியில் முன்னேறிவிட்டதோ அந்த சமுதாயத்தின் வளர்ச்சியை யாராளும் தடுக்க இயலாது இதற்கு உதாரணம் நம் கண்முன்னே வாழும் கிருஸ்தவ மற்றும் பார்ப்பன சமுதாயங்கள். நம்முடைய முதல் இலக்கு கல்வியாக இருக்க வேண்டும். கண்டிப்பபாக அரசியலாக இருந்துவிடக் கூடாது.

 

தமிழக அரசியலில் முஸ்லிம்களின் நிலை

தமிழகத்தைப் பொருத்தவரை முஸ்லிம்கள் எல்லா பகுதியிலும் பரவலாக வாழ்ந்து வருகின்றனர் ஆகையால் எந்த சட்டமன்றத் தொகுதியிலும் போதுமான வாக்குவங்கி இல்லாததால் தனித்துப் போட்டியிட்டு கனிசமான வாக்கைப் பெறும் சூழல் இல்லை. இதனால் முஸ்லீம் சமுதாய அரசியல் மட்டும் மற்ற ஜாதிக் கட்சிகளைப் போல் பெரிய அளவில் வளர முடிவதில்லை. ஆனால் தமிழக அளவில் பல சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றியை நிர்ணயிக்கும் சமுதாயமாக நாம் இருக்கிறோம் என்பதில் அய்யமில்லை.

 

முஸ்லிம்களைப் பொருத்தவரை மற்ற சமூக மக்களைப் போல் பல அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் இருக்கிறார்கள். திமுக, அதிமுக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகளில் பெரும்பலான முஸ்லிம்கள் விசவாசிகளாகவும் இருக்கின்றனர். இந்நிலையில் சமுதாய அரசியலின் தாக்கம் இவர்கள் மத்தியில் எடுபடாமல் போய்விடுகிறது. அதனால் தான் சமுதாய இளைஞர்களை குறிவைத்து பிரச்சாரம் செய்கின்றனர். அது மட்டும் அல்லாமல் சமுதாய அரசியல் கட்சியினர் கூட ஆளும் மற்றும் எதிர் கட்சி விசுவாசிகளாக மாறிவிடுகின்றனர். இதுதான் எதார்த்தமான நிலையும் கூட, அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் இவர்களை பிடித்துக் கொண்டால்தான் ஒரு சில தொகுகளையாவது பெற்று பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்த முடியும் என்பது அனைவருடைய நிலையாக இருக்கிறது.

 

சமுதாயத்தறிக்காக சட்டமன்றத்திலும் பாராளுமன்றத்திலும் பேசப் போகிறோம் என்கின்றனர். மக்களும் இவர்களை நம்பி அவர்களை ஆதரிக்கின்றனர். இந்திய அரசியலைப் பொருத்தவரை எந்தக் சிறிய கட்சியும் ஆளும் கட்சியை சார்ந்தே இருக்கவேண்டும் எனவே சட்டமன்ற பாராளுமன்றங்களில் எந்தக் கட்சி பேசுவதாக இருந்தாலும் ஆளும் கட்சியுடன் ஆலோசனை செய்த பிறகே பேசுவது வழக்கம். அரசுக்கு எதிராகப் பேசவேண்டிய நிலை ஏற்பட்டால் கூட்டணியை விட்டே வெளியேறும் நிலை ஏற்படும். கடந்த காலங்களில் கூட்டணிக் கட்சியாக இருந்து கொண்டு ஒரு போரட்டம் கூட ஆளும் கட்சிக்கு எதிராக செய்யாதவர்களாகத்தான் இந்த சமுதாய அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்பதை அனைவரும் அறிவர்.

 

அது மட்டும் இல்லாமல் கூட்டணிவைத்து சீட்டுப் பெற்று வெற்றியும் பெறுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த தொகுதிக்காக தம்முடைய எம் எல் ஏ நிதியிலிருந்து ஏதாவது செய்தால்தான் உண்டு. எந்த அரசு நலத்திட்டங்களும் கூட்டணிக்கட்சி தொகுதிகளுக்கு வர வாய்ப்பே இல்லை. ஒட்டுப் போட்ட மக்களுக்கு எதுவுமே செய்யாவிட்டால் அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரிக்க மாட்டார்கள். ஆதரிப்பது இருக்கட்டும் அடுத்த தேர்தலில் இவர்கள் எந்தக் கூட்டணியில் இருப்பார்கள் என்பது தெறியாது, மீண்டும் அதே தொகுதி கிடைக்குமா என்பதோ மிகப்பெறிய கேள்விக்குறியான ஒன்றே.

 

இவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி சமுதாய அரசியல்வாதிகள் சமூகத்திற்கு ஏதாவது செய்யமுடியும் என்ற சூழல் குறைவே.....

தனியாக நின்று ஓட்டை பிறித்து நம்முடைய வாக்கு என்ற ஆயுதத்தை வீணடிப்பதைவிட அதை ஆயுதமாக பயன்படுத்தி ஆளும் வர்கத்தினரிடம் சமூகத்திற்காக ஏதேனும் ஒரு கோரிக்கையை வைத்து அதை ஆளும் கட்சி செய்யும் என்ற நிலையில் அவர்களுக்கு வாக்களிப்பதே சிறந்த யுக்தியாக இருக்கும். சமுதாயமும் பயன்பெறும் வகையில் இருக்கும்.