சமையல் கேஸ் விலையை 100 உயர்த்த திட்டம்

21/12/2010 16:38

 

சமையல் கேஸ் விலையை ரூபாய் 50 முதல் 100 வரை உயர்த்த மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டிருப்பதாக டெல்லி வட்டாரம் தெரிவித்தது.

இந்தியாவில் உள்நாட்டு தேவைக்காக ஆண்டு ஒன்றுக்கு 30 லட்சம் டன் இயற்கை எரிவாயு இறக்குமதி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கடந்த ஆகஸ்ட் முதல் இயற்கை எரிவாயு விலை 66 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது பெட்ரோல் விலையை உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் சர்வதேச நிலவரத்துக்கு ஏற்றவாறு பெட்ரோல் விலை ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த வாரம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 உயர்த்தப்பட்டது.

 

 

விரைவில் டீசல் விலையையும் அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஏற்கனவே கடுமையான மானியத்துடன் விநியோகிக்கப்பட்டு வரும் சமையல் எரிவாயுவின் விலையை ஓரளவு உயர்த்த மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

தற்போது குளிர்காலம் தொடங்கிவிட்டதால் சமையல் எரிவாயுவின் தேவை அதிகரித்துள்ளது. ஜனவரி 1 முதல் ஒரு சிலிண்டருக்கான மானியம் 367 ஆக அதிகரிக்கும் என எண்ணெய் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை காட்டிலும் அதிகமாகும். வரும் 22&ம் தேதி டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்சர் குழு விவாதிக்க உள்ளது. அப்போது கேஸ் சிலிண்டர் விலை உயர்வு குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது.

50 முதல் 100 வரை சிலிண்டர் விலையை உயர்த்த வேண்டும் என பொதுத்துறை நிறுவனங்கள் கோரிக்கை வைத்துள்ளன.

 

nakkheeran.in