சிரியாவில் கலவரம்: மர்ம கும்பல் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலி

22/05/2011 17:32

சிரியாவில் அதிபர் பாஷார் அல்-ஆசாத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். எனவே போராட்டக்காரர்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. அதில் இதுவரை 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

 
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபர் பாஷார் அல்-ஆசாத் பதவி விலகி ஜனநாயகத்தை மலர செய்ய வேண்டும். அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இதை தவிர வேறு வழியில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.    
 
இந்நிலையில், வெள்ளிக்கிழமையான நேற்று தொழுகை முடிந்தபின் பொதுமக்கள் சிரியாவில் உள்ள பல நகரங்களில் அமைதியான முறையில் பேரணியும், போராட்டங்களும் நடத்தினர்.
 
அப்போது துப்பாக்கிகளை ஏந்திய மர்ம கும்பல் ஹோம்ஸ், பால்மைரா, டமாஸ்கஸ், டாரா உள்ளிட்ட பல நகரங்களில் புகுந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் சுமார் 30 பேர் பலியாகினர். அவர்களில் போலீசாரும் அடங்குவர்.
 
இதற்கிடையே மர்ம கும்பல் என்ற போர்வையில் சிரியா ராணுவம்தான் தாக்குதல் நடத்தியது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மாலைமலர்