சிறுபான்மை மக்கள் முன்னேற முயற்சி எடுக்கவில்லை: விஜயகாந்த்

08/09/2010 10:03

தே.மு.தி.க., சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி வடசென்னை, தண்டையார்பேட்டையில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்று நோன்பு திறந்து வைத்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:

இஸ்லாம் என்பது மதம் கிடையாது; மார்க்கம். அனைவரிடத்திலும் அன்பு காட்ட வேண்டும், ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்பதைத்தான் குர்-ஆன் கூறுகிறது.எனக்கு அனைத்து மதங்களின் மீதும் நம்பிக்கை உள்ளது. எனது வீட்டிலும், அலுவலக அறையிலும் அனைத்து மத கடவுள் படங்களும் உள்ளன. கிடங்குகளில் வீணாகும் உணவுப்பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. ஆனால், நாட்டில் ஏழைகள் அதிகம் உள்ளநிலையில், அவற்றை பங்கிட்டு கொடுக்க முடியாது.மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் சுப்ரீம் கோர்ட் தலையிடக் கூடாது என்கின்றனர். ஏழைகளை வாழவைக்கும் அரசு என்றால், வீணாகும் பொருட்களை கொடுக்கவேண்டியதுதானே. அங்கு அப்படி என்றால் இங்கு தி.மு.க., அரசு பொதுமக்களுக்கு குல்லா போட்டு ஏமாற்றுகிறது.

சிறுபான்மை சமூக மக்களின் நண்பர் என்று கூறுபவர்கள், அவர்களின் முன்னேற்றத்திற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. நான் இதை தட்டிக்கேட்டால் கோபம் வருகிறது. விஜயகாந்தால் மட்டும் இதையெல்லாம் செய்ய முடியுமா என்று கேட்கின்றனர்.இப்படி தொடர்ந்து பேசினால் என் சொத்தை பறிப்பார்கள்; வெட்டுவார்கள். இதற்கெல்லாம் நான் என்றைக்கும் அஞ்சமாட்டேன். என்னை வாழ வைத்த மக்களுக்காக என்னவேண்டுமானாலும் செய்வேன்.இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.இந்நிகழ்ச்சியில் தே.மு.தி.க., மாநில நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.