சிறுபான்மையினருக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் வேலூர் முதலிடம்

31/08/2010 09:51

மாநிலத்தில் சிறுபான்மையினருக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் திண்டுக்கல் மாவட்டம் இரண்டாம் இடம் பெற்றுள்ளதாக, மாநில சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் சேவியர் அருள்ராஜ் கூறினார்.

திண்டுக்கலில் சிறுபான்மையினருக்காக அரசு திட்டங்களை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சேவியர் அருள்ராஜ் பேசியதாவது: சிறுபான்மையினருக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் வேலூர் முதலிடமும், திண்டுக்கல் இரண்டாம் இடமும் பெற்றுள்ளது. இதற்கான கேடயம், முதல்வர் கருணாநிதியால் விரைவில் வழங்கப்படும். இஸ்லாமிய பெண்கள் சங்கத்தில் உறுப்பினர்கள் குறைவாக சேர்கின்றனர். மாநில மொத்த மக்கள் தொகையில் 14 சதவீதத்தினர் சிறுபான்மையினர். அதேசமயம், சுயஉதவிக் குழுக்களில் 7 சதவீத குழுக்களில் மட்டுமே சிறுபான்மையினர் உள்ளனர்.

இந்துக்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில்லை என, திண்டுக்கலில் சில அமைப்புகள் போராட்டம் நடத்தியுள்ளன. சமுதாயத்தில் பின்தங்கியவர்களை உயர்த்துவதற்கு அரசியல் சட்டத்தில் இடமுண்டு. இந்துக்களில் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக 1,437 விடுதிகள் உள்ளன. ஆண்டிற்கு ரூ. 3,000 கோடி அவர்களுக்கு செலவிடப்படுகிறது. எனவே அரசு திட்டத்திற்கு அரசியல் சாயம் பூச வேண்டாம். விண்ணப்பித்த தகுதியுடைய அனைவருக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்தொகை பெற பெற்றோர் உறுதிமொழி தந்தாலே போதும். வங்கிகளில் பணம் செலுத்தாமல் மாணவர்கள் கணக்கு துவக்கலாம். அவர்கள் கணக்கில் கல்வி உதவித் தொகை வரவு வைக்கப்படும். இவ்வாறு சேவியர் அருள்ராஜ் பேசினார். மாவட்ட கலெக்டர் வள்ளலார், சிறுபான்மைதுறை அதிகாரி பொன்னியின் செல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Dinamalar