சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத இடஒதுக்கீடு மத்திய அரசு ஒப்புதல்

24/12/2011 19:32

 

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
 
 மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர்.
 
இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது. மத்திய அமைச்சரவையில், ஏக மனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
 
 மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ள, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஜாதியினர், இந்த இட ஒதுக்கீட்டால் பலன் பெறுவர்.
 
இந்நிலையில் 4.5 சதவீதம் போதாது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் வழக்கம்போல் பாஜக தரப்பில் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.