சுதந்திர தினவிழா: கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து

15/08/2010 12:03

 

இந்தியாவின் 64-வது சுதந்திர தினவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழாவினை சீர்குலைக்க தீவிரவாதிகள் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
 
ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளான மண்டபம் கடற்கரை ஓரங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மண்டபம் முகாமில் தங்கியுள்ள அகதிகள் சுதந்திர தினவிழா நடைபெறும் நேரங்களில் வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கடற்கரை பகுதி முழுவதும் போலீசார் தீவிர ரோந்தில் ஈடுபட்டனர்.
 
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப்குமார் உத்தரவின் பேரில் தேவி பட்டிணம் கடலோர போலீஸ் படையினர் தேவிபட்டிணம் கடற்கரையில் ரோந்து தொடங்கி சித்தார்கோட்டை, முனிவீரன்பட்டிணம், அத்தியூத்து, புதுவலசை, பனைக்குளம், அழகன்குளம், ஆற்றாங்கரை போன்ற கடற்கரை பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வெளி ஆட்களின் நடமாட்டம் உள்ளதா என அவர்கள் நோட்டமிட்டனர்.
 
இதேபோல் உச்சிப்புளி பகுதி தாமரைக்குளம், புதுமடம், வேதாளை, இரு மேனி போன்ற பல்வேறு பகுதிகளிலும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடு பட்டனர். குறிப்பாக இலங்கை யில் இருந்து சட்ட விரோதமாக கள்ள தோணிகளில் வந்து இறங்கக்கூடிய கடற்கரை பகுதிகளை ராமநாதபுரம் கியூ பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் போலீ சார் மாறுவேடத்தில் கண்காணித்தனர்.
 
மேலும் உச்சிப்புளி, மண்டபம் ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம், ராமேசுவரம் செல்லும் பேருந்துகள், சந்தேகத்திற்கு இடமான வாகனங்கள் ஆகியவற்றை நிறுத்தியும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

https://www.maalaimalar.com/2010/08/14152912/tomorrow-independence-day-mand.html