சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமி போற்ற ஒரு கோள் கண்டுபிடிப்பு

18/05/2011 11:07

சூரிய குடும்பத்துக்கு வெளியே இன்னொரு 'பூமி'

 

 

சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமியைப் போன்றே பாறைகள் கொண்ட புதிய கோளை (exoplanet) அமெரிக்காவின் நாஸா விண்வெளி ஆய்வு மையம் கண்டுபிடித்துள்ளது.

நாஸா அனுப்பியுள்ள கெப்ளர் விண்கலம் இந்த கோளை கண்டுபிடித்தது.சூரிய குடும்பத்துக்கு வெளியே இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சுமார் 700 கோள்களும் வாயுக்கள் நிறைந்ததாகவோ அல்லது மணல் போன்ற துகள்கள் மட்டுமே கொண்டதாக இருக்கும் நிலையில், முதல் முறையாக பாறைகளுடன் கூடிய பூமியைப் போன்ற கோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டறியப்பட்டுள்ள மிகச் சிறிய முதல் கோளும் இது தான்.

கெப்ளர் 10பி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தக் கோள் பூமியை விட 40 சதவீதம் மட்டுமே பெரிதானது. ஒரு நட்சத்திரத்தை 20 மணி நேரத்துக்கு ஒருமுறை சுற்றி வருகிறது. நமது சூரியன் அல்லாத பிற நட்சத்திரங்களை சுற்றி வரும் இதுபோன்ற கோள்களுக்கு எக்ஸோபிளானட் (exoplanet) என்று பெயர்.

மிக அதிகமான வெப்ப நிலையுடன் காணப்படும் இந்தக் கோள் உயிரினங்கள் வசிக்கும் நிலையில் இப்போது இல்லை. ஆனால், பூமி உருவாகும்போது இதைவிட மிக அதிகமான வெப்ப நிலையில் தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கெப்ளர் 10பி கோள் உருவானபோது மிகப் பெரியதாக, இன்னும் அதிக வெப்ப நிலையுடன் இருந்திருக்கலாம், பின்னர் சுருங்கி, வெப்ப நிலையும் குறைந்து இந்த அளவை அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

எனவே பூமி போன்ற உயிர்கள் வாழும் கிரகங்கள் உருவான வரலாற்றை அறிவதில் இந்த கெப்ளர் பி பெருமளவில் உதவலாம் என்று நம்பப்படுகிறது.

2009ம் ஆண்டில் விண்ணில் செலுத்தப்பட்ட கெப்ளர் விண்கலம் சிக்னஸ் மற்றம் லைரா வானியல் மண்டலங்களுக்கு இடையே உள்ள சுமார் 1.5 லட்சம் நட்சத்திரங்களை ஆய்வு செய்து, அவற்றைச் சுற்றி வரும் கோள்களை கண்டுபிடித்து வருகிறது.

இந்த விண்கலம் அனுப்பும் படங்கள், தகவல்களுடன் பூமியில் உள்ள நாஸாவின் பல்வேறு வானியல் தொலைநோக்கிகளும் இணைந்து இந்தக் கோள்களை ஆய்வு செய்து வருகின்றன.

இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள கெப்ளர் 10பி கோள் பூமியிலிருந்து 560 ஒளி ஆண்டுகள் (light years) தொலைவில் உள்ளது. இதன் வயது 8 பில்லியன் ஆண்டுகளாக இருக்கலாம் என்று தெரிகிறது.

 

வணக்கம் மலேசியா