சைபர் கிரைம் குற்றங்கள் - பொது மக்களுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் !

26/08/2010 14:09

சைபர் கிரைம் என்று சொல்லப்படும் கணினி வழி குற்றங்களில் இருந்து பாதுகாக்க பொது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குனர் கே ஆர் ஆனந்தா கேட்டுக் கொண்டார். சென்னையில் இன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் மேலும் கூறியதாவது :

தற்சமயம் மோசடி செய்பவர்களின் செயலாக்கம் விரிவடைந்துள்ள சூழலில் சான்றிதழ்கள், கடிதங்கள், சுற்றறிக்கைகள் ஆகியவற்றை ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ கடித ஏட்டில் உயர் வங்கி அதிகாரியின் கையப்பம், தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அளித்து பொது மக்களை தங்கள் வலையில் எளிதாக சிக்க வைக்கின்றனர். இத்தகைய வலையில் சிக்கயவர்கள் பணத்தை வங்கியில் செலுத்துகின்றனர். பணம் செலுத்தப்பட்டவுடன் மோசடியாளர்கள் அந்த பணத்தை கணக்கில் இருந்து எடுத்துவிடுகின்றனர். மேலும் அதிக தொகைகள் பரிவர்த்தனை வரிகள், பதிவுக் கட்டணம் என்ற பெயரில் கேட்கப்படுகின்றன.  

இத்தகைய மோசடிகளிலிருந்து பொது மக்களை காப்பதற்காக இந்திய ரிசர்வ் வங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் மூலமாக தொடர் விளம்பரங்கள் செய்து வருகிறது.

ரிசர்வ் வங்கி தனிப்பட்டவர்களுக்காக வைப்பு கணக்குகளை தொடங்குவதில்லை. அதேபோன்று எந்தவொரு தனிப்பட்ட நபரின் பெயரிலோ அல்லது நிறுவனத்தின் பெயரிலோ கணக்குகளை பராமரிப்பதில்லை. இதுபோன்ற கணக்குகளில் பணம் சேர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி எவ்விதமான சான்றிதழும் அளிப்பதில்லை. பண விநியோகத்திற்கான அதிகாரமும் எந்தவொரு நபருக்கு வழங்குவதில்லை.

இத்தகைய மோசடி திட்டங்களில் சிக்கி பொது மக்கள் பலர் பெரும் தொகைகளை இழந்துள்ளனர். இந்தியாவிற்கு வெளியே இத்தகைய நோக்கத்திற்காக பணத்தை அனுப்புவது, அன்னியச் செலாவணி நிர்வாகச் சட்டம் 1999-ற்கு எதிரானதாகும். மேலும் ரிசர்வ் வங்கியின் இணையதளம் போலவே போலியான இணையதளத்தையும் உருவாக்கி பொது மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவற்றில் இருந்து பொது மக்களை எச்சரிக்கும் விதத்தில் பத்திரிகை அறிக்கைகள் மற்றும் செய்திகள் மட்டுமின்றி இந்திய அரசுடன் இணைந்து "ஜகோ கிராஹக் ஜகோ" என்ற நிகழ்ச்சி மூலம் இந்த தகவல்களை விளம்பரப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செயல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளூர் காவல் துறையிடம் புகார் அளிக்க வேண்டும் அல்லது சைபர் கிரைம் குற்றவியல் பிரிவில் தொடர்பு கொண்டு தங்களது புகாரை பதிவு செய்ய வேண்டும்.