ஜப்பான் சுனாமி இடிபாட்டுக்குள் கிடந்த முதியவர் 1 மாதத்துக்கு பின்பு மீட்பு

16/04/2011 18:44

 

ஜப்பான் சுனாமி இடிபாட்டுக்குள் கிடந்த முதியவர் 1 மாதத்துக்கு பின்பு மீட்புஜப்பானில் கடந்த மாதம் 11-ந்தேதி சுனாமி தாக்கி பேரழிவு ஏற்பட்டது.   அங்குள்ள புகுஷிமா பகுதியில் பண்ணை வீட்டில் வசித்து வந்தவர் குனியோ ஷிகா (வயது 75). இவருடன் மனைவியும் அந்த வீட்டில் வசித்து வந்தார். சுனாமி தாக்குதலில் இவரது பண்ணை வீடும் சிக்கி கொண்டது. அதில் வீடு இடிந்தது. அத்துடன் சுனாமியால் அடித்து வரப்பட்ட மரங்கள் மற்றும் பொருட்கள் இந்த வீட்டை சூழந்து கொண்டன.
 
இதில் அவரது வீடு அமைந்த பகுதி முழுவதும் குப்பை மேடு போல மாறி விட்டது. சுனாமி வெள்ளம் அவரது மனைவியை அடித்து சென்று விட்டது. குனியோ ஷிகா மட்டும் இடிபாட்டுக்குள் சிக்கி கொண்டார். ஆனாலும் அவர் உடலில் காயம் ஏதும் ஏற்படவில்லை. வீட்டுக்குள் நடமாடும் அளவுக்கு இடம் இருந்தது. ஆனால் அங்கிருந்து வெளியே வர முடியாத அளவுக்கு இடிபாடுகளாக கிடந்தன.
 
எனவே இடிபாட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தார். வீட்டில் ஏற்கனவே சேமித்து வைத்திருந்த உணவுகளை சாப்பிட்டார். ஒரு மாதம் கழித்து அந்த இடத்தில் கிடந்த இடிபாடுகளை மீட்பு படையினர் அகற்றினர். அப்போதுதான் குனியோஷிகா உயிரோடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
 
இவரது வீடு அருகேதான் சுனாமியால் பாதிக்கப்பட்ட அணுமின் நிலையம் இருந்தது. அங்கு கதிர்வீச்சு ஏற்பட்டதை அடுத்து 20 கிலோ மீட்டர் சுற்றளவில் வசித்த அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டனர். எனவே இந்த பகுதியில் ஆள் நடமாட்டமே இல்லாமல் இருந்தது.மீட்பு படையினர் அந்த பகுதிக்கு செல்லவில்லை. 1 மாதம் கழித்து மீட்பு பணி நடந்ததால் இத்தனை நாட்களும் அவர் இடிபாட்டுக்குள்ளேயே சிக்கி இருந்து உள்ளார்.

மாலைமலர்