ஜவாஹிருல்லாவுக்கு அமைச்சர் பதவி?

15/05/2011 16:57

புதிதாகப் பொறுப்பேற்கவுள்ள அதிமுக அரசின் அமைச்சரவையில் புதுமுகங்கள் உட்பட சுமார் 35 அமைச்சர்கள் இடம்பெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

2001-2006 வரையிலான முந்தைய அதிமுக அமைச்சரவையில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 36 பேர் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர். தற்போதைய அமைச்சரவையும் இதே எண்ணிக்கையில் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் முஸ்லிம்களின் வாக்குகள் அதிமுக கூட்டணியிலுள்ள முஸ்லிம் கட்சிக்கே அதிகம் கிடைத்து இருப்பதால் முஸ்லிம்கள் நிறைந்துள்ள வேலூர் அல்லது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் பதவி ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது. கூட்டணிக்குள் முதலில் வந்ததோடு கடைசிவரை அதிமுக தலைமைக்கு எந்தக் குடைச்சலும் கொடுக்காமல், சிறுபான்மை ஓட்டுக்களை அதிமுக கூட்டணிக்குக் கொண்டுவந்த மனித நேய மக்கள் கட்சியின் ஜவாஹிருல்லாவுக்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
 
திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணியே கைப்பற்றியுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சரவையில் முக்கியத்துவம் கிடைக்கும் வாய்ப்புண்டு.
 
அதேபோல், திமுக கோட்டை என்று கூறப்பட்டுவந்த சென்னை மாவட்டத்தில், மொத்தம் உள்ள 16 தொகுதிகளில், 14 தொகுதிகளை அ.தி.மு.க., கூட்டணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளதால் சென்னை மாவட்டத்திற்குக் கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கும் என்பது உறுதி. துறைமுகம் தொகுதியில் முஸ்லிம் லீக்கையும் பின்னுக்குத் தள்ளி, திமுக கோட்டையைத் தகர்த்துள்ள பழ.கருப்பையா சபாநாயகராவதற்கு வாய்ப்புள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

inneram,com