தடையை எதிர்த்து வழக்குத் தொடர அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு

26/09/2010 10:07

அயோத்தி வழக்கில் தீர்ப்பை வெளியிட உச்ச நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து வழக்குத் தொடர அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது.

அயோத்தி வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 24-ம் தேதி அறிவிப்பதாக அலகாபாத் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது. ஆனால் தீர்ப்பு அளிக்க உச்ச நீதிமன்றம் ஒருவார காலம் தடை விதித்துள்ளது.

இந்த தடைக்கு பரவலாக ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரிய உறுப்பினர் குவாஷிம் ரசூல் இலியாஸ் இது குறித்து சனிக்கிழமை கூறியிருப்பது:

நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான இந்த வழக்கில் இருதரப்பும் பேசி சுமுகமாக தீர்வு காண ஏற்கெனவே பலமுறை முயற்சி மேற்கொள்ளப்பட்டு அவை தோல்வியில் முடிந்துள்ளது.

இந்நிலையில் தீர்ப்புக்கு தடை விதித்து, மீண்டும் சுமுகத் தீர்வுகாண வாய்ப்புகளை பரிசீலிக்குமாறு  சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இது தேவையற்றது என்றே நாங்கள் கருதுகிறோம். தீர்ப்பை விரைவில் வெளியிட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. எனவே தீர்ப்பை வெளியிட விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய இருக்கிறோம்.

தீர்ப்பை தாமதப்படுத்தும் நோக்கில் தான் உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு தடை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தரும் தீர்ப்பு இடைக்காலத் தீர்ப்பாகத்தான் இருக்கும். ஏனெனில் வழக்கு நிச்சயமாக உச்ச நீதிமன்றம் வரை செல்லும்.

தீர்ப்பு தாமதமாவதற்கு காங்கிரஸ் கட்சியும் ஒரு காரணம். மத்திய அரசோ, காங்கிரஸ் கட்சியோ இந்த விஷயத்தில் தலையிடக் கூடாது.

வழக்கில் தொடர்புடைய இரு தரப்பினருமே, நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளிப்போம் என்று கூறியுள்ளனர். எனவே தீர்ப்புக்குப் பின் எவ்வித பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்பில்லை என்றார் இலியாஸ்.

Dinamani