தமிழ் வழி படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு: அரசு அவசர சட்டம்

08/09/2010 09:52

தமிழ் மீடியத்தில் பள்ளிப் படிப்பை முடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில் அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

கோவையில் நடந்த உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி தமிழில் படித்த ஒருவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெராக்ஸ் ஆபரேட்டர் பணி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தமிழ் வழியில் படிப்பவர்களுக்கும் அரசுப் பணியில் இட ஒதுக்கீடு அளித்து அவசரச் சட்டம் திடீரென பிரயோகிக்கப்பட்டுள்ளது.

இதற்கான உத்தரவை ஆளுநர் பர்னாலா வெளியிட்டார். ஏன் இந்த அவசரச் சட்டம் என்பது குறித்து சட்டத்துறை செயலாளர் எஸ்.தீனதயாளன் கொடுத்துள்ள விளக்கம்:

2500 ஆண்டுகள் பழமையான தமிழ் மொழி செம்மொழி அந்தஸ்துக்கான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளது. மத்திய அரசு 2004-ம் ஆண்டு அக்டோபர் 12-ந் தேதி தமிழை செம்மொழியாக அறிவித்தது.

தமிழை செம்மொழியாக அறிவித்ததை கொண்டாடும் வகையில் தமிழக அரசு கடந்த ஜுன் மாதம் 23-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை கோயம்புத்தூரில் நடத்தியது. உலகம் முழுவதும் உள்ள சுமார் 50 நாடுகளைச் சேர்ந்த தமிழ் அறிஞர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு தமிழ் மொழியின் செம்மை, இலக்கியம், இலக்கணம் போன்றவை குறித்து ஆய்வறிக்கைகள் சமர்ப்பித்தனர்.

மாநாட்டின் நிறைவு விழாவான 27-ந் தேதி நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களில் மாநில அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்பதும் ஒன்று.

மாநில அரசின் நிர்வாகம் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாக நடைபெறவும், சாதாரண மக்களும் அறிந்து கொள்ள வசதியாக தமிழில் இருக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த சட்டம் இயற்றப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கும், மற்ற சட்டங்களுக்கும் உட்பட்டு இது உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலையிலோ, மற்ற மாநில அரசுகளின் வேலையிலோ, தனியார் துறையிலோ மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன. ஆகையால் மாநில அரசுப் பணிகளில் அவர்களுக்கு முன்னுரிமை தேவைப்படுகிறது.

எனவே தமிழக அரசு அந்த தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் தமிழில் படிப்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஆய்வு செய்தது. உண்மையில் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மற்றும் கல்லூரி பாடங்கள் தமிழ் வழியிலேயே நடத்தப்படுகின்றன. எனவே மாநில அரசின் கீழ் உள்ள காலி பணியிடங்களை நேரடியாக நிரப்பும்போது அதில் 20 சதவீதம் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஒதுக்க வேண்டும். இந்த காரணத்திற்காக தமிழக அரசு இந்த சட்டத்தை கொண்டுவர முடிவு செய்துள்ளது.

இந்த அவசர சட்டம் இந்த முடிவுக்கு செயல்வடிவம் கொடுக்கிறது என்று விளக்கியுள்ளார்.