திருமணம் செய்து கொள்ளுமாறு முஸ்லிம் மாணவிக்கு டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்

22/09/2010 10:52

திருமணம் செய்து கொள்ளுமாறு மாணவியை கொடுமைப்படுத்திய, அரசு பள்ளி ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பொது மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த நீடூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் 435 மாணவியர் படிக்கின்றனர்; 15 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

இப்பள்ளியில் பி.டி.ஏ. ஆசிரியராக பாலாகுடியைச் சேர்ந்த விஜயகண்ணன் பணியாற்றி வருகிறார். இவர், அப்பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவி அஜிதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொந்தரவு செய்துள்ளார். மற்றொரு மாணவி மூலமாகவும் தூது விட்டுள்ளார். இது வெளியில் தெரிந்தால் தன்னை பெற்றோர் பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என நினைத்த அஜிதா, நடந்தவற்றை மறைத்துள்ளார். ஆனால், விஜயகண்ணனின் டார்ச்சர் அதிகமானதால் அஜிதா நேற்று பள்ளிக்கு செல்லவில்லை. ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என உறவினர் கேட்டதையடுத்து, நடந்தவற்றை அஜிதா தெரிவித்துள்ளார்.

இதையடுத்து உறவினர்களும், பொது மக்களும் சேர்ந்து, ஆசிரியர் விஜயகண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பள்ளி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மயிலாடுதுறை தாசில்தார் மாலா, டி.எஸ்.பி. செல்வராஜ் ஆகியோர் விரைந்து வந்து, ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Dinamalar