தேச விரோத சட்டப் பிரிவு திருத்தப்பட வேண்டும்: வீரப்ப மொய்லி

15/04/2011 20:01

இந்திய தண்டனைச் சட்டத்திலுள்ள தேச விரோத குற்றச்சாற்றுப் பிரிவு பழமையானது என்றும், அது திருத்தப்பட வேண்டும் என்றும் மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவினார் என்றும், அது தேச விரோதம் என்றும் கூறி மனித உரிமைப் போராளியும், மருத்துவருமான பினாயக் சென்னிற்கு சட்டீஸ்கர் மாநில நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ள பினாயக் சென், தன்னை பிணையில் விடுவிக்க வேண்டும் என்ற கோரி செய்த மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டு அவருக்கு பிணைய விடுதலை அளித்தது இந்திய உச்ச நீதிமன்றம்.

மாவோயிஸ்ட் ஆதரவாளராக இருப்பது சட்டப்படி தவறல்ல என்றும், தேசத்திற்கு விரோதமான செயலில் பினாயக் சென் ஈடுபட்டதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்றும் தங்கள் தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து டெல்லியில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியிடம் செய்தியாளர்கள் கருத்து கேட்டதற்கு, “இந்தச் சட்டப் பிரிவு இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதாகும். அதுவே இன்றுவரை இருக்கிறது. இது பழமையடைந்துவிட்டது” என்று கூறிய வீரப்ப மொய்லி, இது தொடர்பான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் விவாதிக்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

“உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துடன் பேசுவேன். அதன் பிறகு சட்ட ஆணையத்திடம் பரிந்துரை செய்து, அதனை பரிசீலிக்குமாறு கேட்டுக்கொள்ளலாம்” என்று கூறியுள்ளார்.

இந்திய தண்டனைச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டுமெனில் அதற்கு உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

வெப்துனியா