தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் கான் பெயர் சேர்க்கப்பட்டது தவறுதான்: ப.சிதம்பரம்

19/05/2011 10:00

பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்ட அதிகம் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் வாசூல் கமார் கானின் பெயரைச் சேர்த்த்து தவறு என உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

 

 
மும்பை போலீஸôர் செய்த தவறும் ஐ.பி. உளவுப் அமைப்பின் கவனக் குறைவுமே இதற்குக் காரணம் எனவும் அவர் கூறியிருக்கிறார்.

 

 
இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கருதப்படும் 50 பேரின் பட்டியலை பாகிஸ்தானிடம் இந்திய அரசு ஒப்படைத்தது.

 

 
இந்தப் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. 2003-ம் ஆண்டு மும்பை ரயில் குண்டுவெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்புடைய வாசூல் கானின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது.

 

 
ஆனால், கானை மும்பை போலீஸôர் ஏற்கெனவே கைது செய்ததாகவும் பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாகவும், தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதும் தெரியவந்தது. அவரது பேட்டியும் பத்திரிகையில் வெளியானது.

 

 
இந்தியாவுக்குள் வசிக்கும் ஒருவரது பெயர் பாகிஸ்தானுக்குள் பதுங்கியிருக்கும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டது அம்பலமானதால் இந்தியாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இது பாகிஸ்தாவுடனான

 

 இந்தியாவின் அரசு ரீதியான நடவடிக்கைகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கருதப்பட்டது.

 

 இந்த நிலையில், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தில்லியில் செய்தியாளர்களிடம் பேசியது:

 

 
இந்தத் தவறுக்கு நாங்கள் பொறுப்பேற்றுக் கொள்கிறோம். மும்பை போலீஸôர் செய்த தவறும் ஐ.பி. அதிகாரிகளின் கவனக்குறைவுமே கான் பெயர் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றதற்குக் காரணம்.

 

 
கான் கைது செய்யப்பட்டது குறித்து இந்த ஆண்டு ஜனவரியில் ஐ.பி. அலுவலகத்துக்கு மும்பை போலீஸôர் தகவல் அனுப்பியிருக்கின்றனர். ஆனால் மார்ச் மாதம் தயாரிக்கப்பட்ட தேடப்படுவோர் பட்டியலில் இந்த விவரம் சரிபார்க்கப்படவில்லை.

 

 
கடந்த ஆண்டு மே 21-ம் தேதி கான் கைது செய்யப்பட்ட விவரம் முறையாகத் தெரிவிக்கப்படாததால் சிபிஐ அமைப்பால் தேடப்படுவோர் பட்டியலிலும் கான் பெயர் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது.

 

 இப்போது சிபிஐ முதல் இன்டர்போல் வரை அனைத்து அமைப்புகளுக்கும் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார் ப.சிதம்பரம்.

 

 
சிபிஐ பட்டியலில் கான் பெயர் நீக்கம்: இதனிடையே சிபிஐ அமைப்பின் தேடப்படுவோர் பட்டியலில் கான் பெயர் நீக்கப்பட்டுள்ளது. சிபிஐ இணையதளத்திலிருந்தும் அவரது பெயர் நீக்கப்பட்டுவிட்டது.

 

 
கடந்த மே மாதமே மும்பை பயங்கரவாத எதிர்ப்புப் படைக்குழுவும், மும்பை போலீஸôரும் கானை கைது செய்த நிலையில், அந்தத் தகவல் சிபிஐக்கும் தெரிவிக்கப்படவில்லை. அதனால், கானுக்கு எதிராக சிபிஐ கைது உத்தரவைப் பிறப்பித்தது. தற்போது அவர் மும்பை புறநகரப் பகுதியில் வசிப்பதாகத் தெரிய வந்திருப்பதையடுத்து இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.

 

 
இந்தத் தவறு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிகிறது.

 

தினமணி