தொடர் மழையை பயன்படுத்தி மளிகைக்கடை பூட்டை உடைத்து கொள்ளை: ராமநாதபுரத்தில் துணிகரம்

30/11/2010 16:16

 

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கின்றன.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கண்மாய் களும் நிரம்பி அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் கடலில் சென்று கலக்கிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு நேற்றுவரை 4-வது நாளாக தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
 
இந்த இடைவிடாத அடை மழையால் ராமநாத புரம் மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. ரோடு களில் மக்கள் நடமாட்டம் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டன.

அத்தியா வசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தனர். ராமநாதபுரம் நகர் பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள் பெரும்பாலானவை அடைக்கப்பட்டு உள்ளன. இந்த தொடர் மழையை பயன்படுத்தி “மர்ம” ஆசாமிகள் சிலர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
ராமநாதபுரம் வனசங்கரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சகுபர்சாதிக் (வயது50). இவர் நகரில் உள்ள கறிக்கடை சந்து பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். தொடர் மழையையும் பொருட் படுத்தாமல் வழக்கம்போல் கடையை திறந்து வைத்து வியாபாரத்தை கவனித்து வந்தார். நேற்று இரவு 10 மணிக்கு கடையை பூட்டி விட்டு அவர் வீட்டிற்கு சென்றார்.
 
இதற்கிடையே விடிய விடிய பெய்து வரும் மழையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட “மர்ம” ஆசாமிகள் சிலர் நேற்று இரவு சகுபர் சாதிக்கிற்கு சொந்தமான மளிகை கடைக்கு வந்து பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்கிருந்த விற்பனை பணம் ரூ.34 ஆயிரத்தை திருடிக் கொண்டு கொள்ளையர்கள் தப்பி சென்றனர். இன்று காலை கடையை திறக்க சென்ற சகுபர்சாதிக் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
 
பின்னர் இந்த கொள்ளை சம்பவம் குறித்து அவர் ராமநாதபுரம் பஜார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.

maalaimalar.com