நிலவில் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை...

10/08/2010 16:32

நிலவில் தண்ணீர் இருக்க வாய்ப்பே இல்லை என்று புதிய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

நிலவில் தண்ணீர் இருக்கலாம்.. நிலவின் உட் பகுதியில் அது பனிக்கட்டியாக உறைந்திருக்கலாம் என்றெல்லாம் சமீபகாலமாகக் கூறப்பட்டு வருகிறது.

இந் நிலையில் நியூ மெக்சிகோ பல்கலைக்கழகத்தின் கோளியல் பிரிவின் பேராசியர் ஷகாரி ஷார்ப் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு நடத்தியுள்ள ஆய்வு இந்த நம்பிக்கையை முழுவதுமாக சிதைத்துள்ளது.

நிலவில் இருந்து கொண்டு வரப்பட்ட பாறைகளில் உள்ள குளோரினின் அளவை ஆய்வு செய்த இந்தக் குழுவினர் அங்கு தண்ணீர் இருக்கவே வாய்ப்பில்லை என்பதை கண்டறிந்துள்ளனர்.

இது குறித்து சயின்ஸ் இதழில் இந்த ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ள கட்டுரை:

நிலவின் பாறைகளில் ஏராளமான குளோரின் ஐசோடோப்புகள் உள்ளன. பூமியில் உள்ள பாறைகளில் உள்ளதை விட நிலவின் பாறைகளில் குளோரின் 25 மடங்கு அதிகமாக உள்ளது.

நிலவில் ஹைட்ரஜன் இல்லாததே இந்த அளவுக்கு குளோரின் படிமம் உள்ளதற்குக் காரணம். ஹைட்ரஜன் இருந்திருந்தால் இந்த குளோரின் அணுக்கள் அதனுடன் இணைந்து ஹைட்ரஜன் குளோரைட் போன்ற கூட்டுத் தனிமங்கள் உருவாகியிருக்கும்.

ஆனால், ஹைட்ரஜன் இல்லாததால் தான் நிலவில் குளோரின் தனித்த நிலையில் உள்ளது.

நிலா சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானபோதே அதில் போதுமான ஹைட்ரஜன் இல்லை. இதனால் அங்கு உயிர்கள் உருவாகும் அளவுக்கு நீர் இருக்கவே வாய்ப்பில்லை என்று கூறப்பட்டுள்ளது.

(ஐசோடோப் என்றால்.... ஒரே ரசாயனத்தின் வெவ்வேறு நியூட்ரான் எண்ணிக்கை கொண்ட அணுக்கள் தான் ஐசோடோப். உதாரணத்துக்கு கார்பன்-12 ஐசோடோப், கார்பன்-13 ஐசோடோப். இதில் கார்பன்-12ல் உள்ளது 6 நியூட்ரான்கள். கார்பன்-13ல் உள்ளது 7 நியூட்ரான்கள்.. அவ்வளவு தான் சிம்பிள்!!)

https://thatstamil.oneindia.in/editor-speaks/2010/08/moon-water-dreams-evaporate.html