நேட்டோ தாக்குதலில் பொதுமக்கள்தான் இறந்தனர்: ஹமீத் கர்சாய் குற்றச்சாட்டு

04/09/2010 11:32

நேட்டோ படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீத் கர்சாய் குற்றம்சுமத்தியுள்ளார்.

Dinamani

வடக்கு தாஹர் மாகாணத்தின் ரஸ்டாக் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரு காரை குறிவைத்து நேட்டோ படை விமானத் தாக்குதல் நடத்தியது.

இத்தாக்குதலில் தலிபானின் முக்கிய கமாண்டர் உள்பட 12 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக நேட்டோ படை தெரிவித்தது.

ஆனால் அதிபர் ஹமீத் கர்சாய் இதை நிராகரித்துள்ளார். நேட்டோ படையின் தாக்குதலில் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக குற்றம்சுமத்தியுள்ளார்.

தாஹர் மாகாணத்தின் ஆளுநர் அப்துல் ஜாபரும் நேட்டோ படை நடத்திய தாக்குதலில் வேட்பாளர் அப்துல் வாஹித் உள்பட பொதுமக்கள்தான் கொல்லப்பட்டதாக குற்றம்சுமத்தியுள்ளார். இத்தாக்குதல் மூலம் நேட்டோ படை பெரிய தவறை செய்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் தொடர்பாக ஆப்கானிஸ்தானில் ஒரு கூட்டணி கட்சிகளின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், நேட்டோ படை தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்படுவதாக ஆரம்பத்தில் இருந்தே புகார் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை யாரும் ஏற்கவில்லை. இப்போது அது உறுதியாகியுள்ளது. இதனால் இந்த சம்பவங்கள் குறித்து முழுமையான விசாரணை அவசியம் என்றார்.

நேட்டோ படை தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று அதிபர் ஹமீத் கர்சாய் திட்டவட்டமாக கூறிவருவது அப்படையினருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆதிக்கத்தை செலுத்த முயலும் தலிபான்களுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை பாதிக்கக்கூடும் என்று கருதுகின்றனர்.

அமெரிக்க அமைச்சர் வருகை: இதனிடையே, இந்த சம்பவம் குறித்து ஹமீத் கர்சாய், ஆப்கானிஸ்தானின் நேட்டோ படை கமாண்டர் ஜெனரல் டேவிட் பேட்ரியாஸ் ஆகியோரிடம் ஆலோசிப்பதற்காக  அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் ஆப்கானிஸ்தான் வந்துள்ளார். அமெரிக்காவின் ராணுவ மையத்தின் தலைவரும் ஆப்கானிஸ்தானுக்கு விரைவில் வருகை தரவுள்ளதாக அந்நாட்டு அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்கானிஸ்தானில் செப்டம்பர் 18-ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அங்கு தேர்தல் வன்முறை அதிகமாக நடந்து வருவதாக பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை 3 வேட்பாளரும், பிரசாரத்தில் ஈடுபட்ட 5 பேரும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.