நேட்டோ தாக்குதல் - ஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள், 2 பெண்கள் பலி

30/05/2011 09:31

 நேற்று நேட்டோப் படைகள் ஆப்கனில் நடத்தியத் தாக்குதலில் 12 குழந்தைகளும், 2 பெண்களும் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் பற்றி விசாரணை நடந்து வருவதாக ஆப்கன் அரசும், நேட்டோத் தரப்பும் கூறியுள்ளன. இந்தத் தாக்குதல் பொதுமக்கள் மீது நடத்தப்பட்டதாக நேட்டோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக நேட்டோப் படைகள் போரிட்டு வருகின்றன. பல சமயங்களில், நேட்டோப் படைகள் தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்ச்சை எழுந்தது உண்டு. அது போல தற்பொழுதும் சர்ச்சை எழுந்துள்ளது. நேற்று நேட்டோப் படைகள் ஆப்கானிஸ்தானில், ஹெல்மன்ட் மாகாணத்தில் உள்ள நவ்சாத் மாவட்டத்தில் , பொது மக்கள் வாழும் பகுதிகள் மீது வான்தாக்குதல்களை மேற்கொண்டதாகவும், அதில் சுமார் 12 குழந்தைகளும், 2 பெண்களும் கொல்லப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன.

எனினும், நேட்டோத் தரப்பில், தங்கள் படைகள் மீது தீவிரவாதிகளால் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து தாங்களும் தீவிரவாதிகள் மேல் பதில் தாக்குதல் நடத்தியதாகவும், ஆனால் அதில் கொல்லப்பட்டவர்கள் விவரம் எதுவும் தெரியாது என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும், பொது மக்கள் தரப்பில், நேட்டோ ஹெலிகாப்டர்கள் திடீரென்று அங்கு வந்ததாகவும், அருகில் இருந்த இரண்டு வீடுகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதில் இரண்டு பெண்களும், 12 குழந்தைகளும் இறந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல் பற்றி ஆப்கன் அரசும், நேட்டோத் தரப்பும் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.

Bharathnews.com