பணவீக்கம் என்றால் என்ன? அதைக் கட்டுப்படுத்துவது எப்படி?

02/11/2010 12:58

பணவீக்கம் (money inflation)

 

கை வீங்கும், கால் வீங்கும், பணம் வீங்குமோ?

கையோ, காலோ... அளவோடு வளர்ந்தால் வளர்ச்சி. அளவுக்கு அதிகமாகப் பெருத்தால் அது வீக்கம்!

அதே மாதிரி ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் மதிப்பைவிட பணம் - பேப்பர் கரன்ஸி - ரூபாய் நோட்டுகள் அதிகமானால் அதுவே பணவீக்கம்!

மார்க்கெட்டில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன. மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது என்றால் அதே விலைக்கு வாங்குவதில் சிக்கல் இல்லை. மக்களிடம் ரூ. 200 கோடி ரூபாய் பணம் இருந்தால்...?

அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். பொருட்களின் உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள அதே பொருட்களை 200 கோடி ரூபாய் வரை விலை ஏற்ற வாய்ப்பு ஏற்பட்டுவிடுகிறது. விலைவாசி உயர்கிறது. அதாவது உயர்த்தப்படுகிறது.

மற்றொரு நிகழ்வைப் பார்க்கலாம். மக்களிடம் 100 கோடி ரூபாய் பணம் இருக்கிறது. மார்க்கெட்டில் பொருட்களின் சப்ளை குறைத்துவிடுகிறது. 50 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தான் வந்திருக்கின்றன. என்ன ஆகும்?

அப்பொழுதும் போட்டிதான். குறைவான பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்க மக்கள் போட்டியிடுவார்கள். விலை உயரும்... அதாவது உயர்த்தப்படும்.

இவ்வாறு பணப்புழக்கம் அதிகரித்தால் அல்லது சப்ளை குறைவின் காரணமாக, இருக்கும் பணமே அதிகம் என்று ஆகிவிட்டால் ("Too munch of money, chasing too few goods...")
அந்த நிலையே பணவீக்கம் என்று அழைக்கப்படுகிறது.

 

இந்தியப் பொருளாதாரத்தின் சீரான வளர்ச்சிக்கு பணவீக்க விகிதம் 4.5 சதவீதம் இருக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் கூறியுள்ளார்.

 

பணவீக்க விகிதம் உயர்ந்தால் விலை உயர்கிறது என்று அர்த்தம். பணவீக்கம் குறைந்தால் விலை குறைகிறது என்று பொருளா இல்லை, விலை உயரும் வேகம் அல்லது அளவு குறைகிறது என்று பொருள். பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்று சொன்னால், விலைவாசியைக் குறைத்துவிட்டோம் என்று பொருள் அல்ல. கடந்த மாதம் ஒரு பொருளின் விலை 2 ரூபாய் அளவுக்கு உயர்ந்திருந்தால், இந்த மாதம் அது ரூ. 1.50 அளவுக்கு உயரும் என்றுதான் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

பணப்புழக்கம் எப்படி அதிகரிக்கிறது?

நமது நாட்டில் ஆண்டுதோறும் பற்றாக்குறை பட்ஜெட் தான். அதாவது வரவை விட செலவு அதிகம்.

இப்படித் துண்டு விழும் செலவைச் சமாளிக்க அரசு வெறும் கரன்ஸி நோட்டுகளை அச்சடித்துத் தள்ளுகிறது. பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்கிறது. விளைவு? பணவீக்கம்!

தனியார்துறைக்கு அளவுக்கு அதிகமாக பணத்தைக் கடனாக அளிப்பதாலும் பணப்புழக்கம் அதிகமாகி, பணவீக்கம் அதிகரிக்கிறது.

 

பணசுருக்கம் (money deflation)

 

பணவீக்கம் என்றால் என்ன என்பது நமக்கு எல்லாம் தெரிந்த விஷயம். பொருட்களின் விலை கூடுவதை பணவீக்கம் என்கிறோம். அதாவது ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை இப்போது Rs.110/- ஆக இருந்தால் பணவீக்கம் 10% என்கிறோம். இதற்கு நேர் மாறாக ஏற்கனவே Rs.100/- கொடுத்து வாங்கிய பொருளின் விலை குறைந்து Rs.90/- ஆக இருந்தால் இதையே DEFLATION என்கிறோம் (பணவீக்கத்திற்கு நேர் எதிர்மறையானது). பணவீக்க்கம் என்பது நம்முடைய பணத்தின் மதிப்பை குறைக்கிறது என்றால் அதற்கு நேர்மறையான DEFLATION பணத்தின் மதிப்பை கூட்டுகிறது. அட இது நல்ல இருக்குதே என்று சொல்ல தோணலாம். அனால் இதனுடைய தாக்கம் என்ன என்று கொஞ்சம் ஆழ்ந்து கவனிதொமென்றால் இப்படி சொல்ல தோணாது.

 

அண்மைக்காலங்களில் 13% வரை இருந்த பணவீக்கம் இப்போது 2.43% ஆக குறைந்திருக்கிறது. இந்த பணவீக்கம் இப்படியே குறைந்து 1% ஆகி அதன் பின் 0% ஆகி அதன் பின் -1% என்று வரும் போது நாம் அதை DEFLATION என்கிறோம். (பணவீக்கத்திற்கு எதிர்மறையான வார்த்தை என்ன என்று தேடிப்பார்த்தேன்...ம்ஹூம் கிடைக்கவில்லை அதனால் DEFLATION என்று எழுத வேண்டிய கட்டாயம்...!!! பணவீக்கதிருக்கு எதிர்மறையாக பணசுருக்கம் என்று வேண்டுமானால் சொல்லலாம்)

 

DEFLATION என்றால் பொருட்களின் விலை குறையும் என்று பார்த்தோம். பொருட்களின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் பொருட்கள் வாங்குவதை தள்ளிப்போட முயற்சிப்பார்கள். பொருட்களின் விலை குறைகிறது என்றால் உற்பத்தியாளர்களுக்கு லாபம் குறையும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் உற்பத்திக்கு செய்த செலவை கூட விற்று வரும் வருமானம் மூலம் எடுக்க முடியாமல் போகலாம். ஆக பொருட்களின் விலை குறையும் போது உற்பத்தியாளர்கள் உற்பத்தியை குறைப்பார்கள். உற்பத்தியை குறைக்கும் போது தொழிலாளர்களை குறைப்பார்கள். வேலை இல்லா திண்டாட்டம் ஏற்படும். வேலை இல்லாமல் போவதால் மக்களின் வாங்கும் சக்தி குறையும். வேலை இல்லை என்பதால் கையில் பணம் இல்லை, பணம் இல்லை என்பதால் பொருட்கள் வாங்க முடியாது. பொருட்களை வாங்க ஆள் இல்லை என்னும் சூழ்நிலை வரும்போது, உற்பத்தியாளர்கள் இன்னும் விலையை குறைக்க வேண்டிய அவசியம். அப்படியாவது கிடைத்த விலைக்கு விற்கலாமே என்று எண்ணி, உற்பத்தியாளர்கள் விலையை குறைக்க வேண்டிய நிர்பந்தம் வரும். அப்படி மீண்டும் விலை குறைத்து, நஷ்டத்திற்கு வருவதால் மேற்கொண்டு உற்பத்தியை கூட்ட தயங்கி, இன்னும் உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழ்நிலை, அதனால் இன்னும் வேலை இழப்பு. இப்படி ஒரு சைக்கிள் மாதிரி விலை குறைப்பு, உற்பத்தி குறைப்பு, வேலை இழப்பு, உற்பத்தி செய்த பொருட்களை விற்க முடியாத தன்மை என்று இது ஒரு புதைகுழி மாதிரி பொருளாதாரத்தை மோசமாக பாதிக்கும். இபப்டி ஒரு சூழ்நிலை இருப்பதால் புதிதாக முதலீடு செய்ய யாருக்கும் ஆர்வம் இருக்காது. அதனால் முதலீடு பாதிக்கும், புதிய முதலீடு இல்லாமல் இருப்பதால், வேலைவாய்ப்பு உருவாகாது. வேலை வாய்ப்பு இல்லை, வருமானம் இல்லை, வாங்கும் சக்தி இல்லை என்று பொருளாதாரத்தை மிக மோசமாக பாதிக்கும்.

 

விலைவாசி மாற்றத்திற்கு உற்பத்தியும் ஒரு காரணம்

 

சிலநேரங்கிளில் உற்பத்தி அதிகமாகிறது, மக்களின் தேவை குறைவாக இருக்கிறது அந்த நேரத்தில் அந்த குறிப்பிட்ட பொருளின் விலை குறைகிறது. உதாரணத்திற்கு தக்காலி விளைச்சல் அதிகமானல் கிலோ 1 ரூபாய்க்கு விற்க்கப்படும். அதே விளைச்சல் குறைந்தால் 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சில நேரங்களில் விளையும் பொருட்களை சந்தைக்கு கொண்டு வருவதற்க்கு கூட முடியாத அளவிற்கெல்லாம் உற்பத்தி இருக்கும். அதை சந்தைக்கு கொண்டு வரும் செலவைக்கூட ஈடுகட்ட இயலாத அளவிற்க்கு விளை வீழ்ச்சி ஏற்படும். அதனால் அதை விளை நிலங்களிலேயே அழித்துவிடும் நிகழ்வு கூட நடக்கிறது. அமெரிக்காவில் விளையும் ஆப்பிள் மொத்த உலகத்தின் தேவைக்கு போதுமானதாக இருக்குமாம் ஆனால் அதை எல்லா இடங்களுக்கும் கொண்டு செல்லும் செலவு அதிகம் என்பதால் அதை அங்கேயே அழித்து விடுகின்றனர். அதே போல் அமெரிக்காவில் விளையும் கோதுமையை டன் கணக்கில் கடலில் கொட்டுகின்றனர். தற்ப்போது அதை பயோ எரிபொருள் தயாரிக்க உணவுப் பொருட்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

 

இந்திய பொருளாதாரம்


இந்திய பணவீக்கம் மார்ச் 2010 முடிவில் 14.86 சதமாக உயர்ந்திருக்கிறது, அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றமே அதற்கு காரணம் என்றெல்லாம் படித்திருப்பீர்கள் அல்லது கேள்வியாவது பட்டிருப்பீர்கள்.


பணவீக்கத்தை கணக்கிட இரண்டு முறைகள் பின்பற்றபடுகின்றன,


1 . மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் ( Wholesale Price Index Inflation - சுருக்கமா WPI)
2 . நுகர்வோர் விலை பட்டியல் பணவீக்கம் (Consumer Price Index Inflation - சுருக்கமா CPI)


நமது இந்தியாவில் மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் (WPI) முறையை உபயோகபடுத்துகின்றனர்.


வளர்ந்த நாடுகளில் நுகர்வோர் விலை பட்டியல் பணவீக்கம் (CPI) முறையை பயன்படுத்துகின்றனர்.


WPI முறை 1902 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இம்முறையே பல பொருளாதார வல்லுனர்கள் மற்றும் துறை வல்லுனர்களின் முயற்சியால் 1970 ஆம் ஆண்டு மேலைநாடுகளில் மாற்றப்பட்டு அங்கு உபயோகத்தில் உள்ளது.


WPI முறையில் பொருட்கள் / சரக்குகள் மொத்த விலை சந்தையில் விற்கப்படும்போது ஏற்படும் ஏற்ற-இறக்க விலை மாற்றத்தால் பணவீக்கம் நிர்ணயக்கபடுகிறது.
இந்தியாவில் மொத்தம் 435 பொருட்கள் WPI முறைக்கு கணக்கில் எடுத்துகொள்ளபடுகிறது.

 

முன்பெல்லாம் நாட்டின் ஒட்டுமொத்த பணவீக்கம் என்ற ஒன்று மட்டுமே இருந்தது. தற்போது பணவீக்கம் என்றும் உணவுப் பணவீக்கம் என்றும் தனித்தனியாகப் பிரித்து வெளியிடத் தொடங்கியுள்ளது மத்திய நிதி அமைச்சகம். அதிலும் வாரந்தோறும் வெளியிட்டுவந்த பணவீக்க ஒட்டு மொத்த விகிதத்தை, மாதந்தோறும் வெளியிடுவதென்றும், உணவுப் பணவீக்கத்தை வாரந்தோறும் வெளியிடவும் முடிவு செய்துள்ளது.

 

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பொருள்களின் மொத்த விற்பனை விலை அடிப்படையில், அதில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களின் அடிப்படையில் மத்திய புள்ளியியல் நிறுவனம் மொத்த விலைக் குறியீட்டெண்ணை கணக்கிடுகிறது. இந்தப் பட்டியலில் சில குறிப்பிட்ட பொருள்களே இடம்பிடித்துள்ளன.

 

ஆனால் நடைமுறையில் மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் அதிக வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளை மொத்த விற்பனையாளர் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யலாம். ஆனால் அது பலர் கைமாறி நுகர்வோரைச் சென்றடையும்போது 8 ரூபாய்க்கு விற்கப்படும். இதனால்தான் மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் உண்மையான நிலையைப் பிரதிபலிப்பதில்லை. சில்லரை விலை அடிப்படையிலும் குறியீட்டெண் கணக்கிடப்படுகிறது. ஆனால் பணவீக்கத்தைக் கணக்கிட இதைப் பயன்படுத்துவதில்லை. சில்லரை விலை இடத்துக்கு இடம் வேறுபடும்.

 

மேலும் தொடர்ச்சியாக இவ்விலைகள் பற்றி விவரம் சேகரிப்பதும் கடினம். உண்மையில் மொத்த விலைக் குறியீட்டெண் அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கத்தை விட சில்லரை விலை அடிப்படையில் கணக்கிடப்படும் பணவீக்கம் அதிகமாகத்தான் இருக்கும்.

 

நமது வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் கடையில் ஒரு பொருளை ரூ. 10 கொடுத்து வாங்கினால் அதுதான் உண்மையான விலை. ஆனால் யாரோ ஒருவர் மொத்த விலைக்கு விற்ற விலையைக் கணக்கிட்டு அதனடிப்படையில் பணவீக்கத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறோம் என்று சொன்னால் அது ஏமாற்று வேலையாகத்தானே இருக்க முடியும்.


வாரந்தோறும் வெளியிடப்படும் பணவீக்க விகிதம் இரண்டு வாரங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் அடிப்பைடயில் தான் என்று தெரியுமா!

 
இனி பணவீக்கம் எப்படி கணகிடுகின்றனர் என்று பார்ப்போமா?


உதாரணத்துக்கு,

2001 இல் சர்கரையின் விலை ருபாய் 40 ,

2010 இல் சர்கரையின் விலை ருபாய் 60 என கொள்வோம்.
2010 இல் மொத்த விற்பனை விலை பட்டியல் பணவீக்கம் ( Wholesale Price Index Inflation - WPI) எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள பின்வரும் கணக்கினை இடுவோம்

 

( சர்க்கரை விலை 2010 இல் - சர்க்கரை விலை 2001 இல்) / சர்க்கரை விலை 2001 இல் x 100 ), 

அதாவது


( Rs.60 - Rs.40) / Rs.40 x 100 = 50 % ஆகா உயர்ந்திருக்கிறது  
இதை போலவே மற்ற 434 பொருட்களுக்கும் கணக்கிடப்பட்டு மொத்த சதவிகிதமும் வகுக்கப்பட்டு அரசால் வெளியிடப்படுகிறது.

 

பணவீக்கத்தை கட்டுப்படுத்த என்ன செய்கிறார்கள்?

 

பணவீக்கம் அதிகரித்தால் வாங்கும் சக்தி குறையும். கடந்த ஆண்டு இதே காலத்தில் 20 ரூபாய்க்கு அரை கிலோ புளி வாங்கியிருந்தால், இந்த ஆண்டு கால் கிலோ புளிதான் 20 ரூபாய்க்குக் கிடைக்கும். இந்த நெருக்கடியைச் சமாளிப்பதற்குத்தான் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது பஞ்சப்படி (டிஏ) அளிக்கப்படுகிறது. தனியார்துறையினர், அன்றாடக் கூலிகளின் நிலைமை அதோ கதிதான்.

 

பணவீக்க காலங்களில் பொருட்களின் விலை கூடும், மக்களின் வாங்கும் சக்தி குறையும். கூடுகின்ற பொருட்களின் விலையை கட்டுப்படுத்த மக்களிடம் இருக்கும் பண நடமாட்டத்தை குறைக்கும் விதமாக வங்கிகள் அதிக வட்டி தந்து மக்களிடம் இருக்கும் பணத்தை வங்கியில் முடக்க முயற்சி எடுக்கும். கையில் பண நடமாட்டம் குறையும் பொது பொருட்களை வாங்குவது குறையும். வாங்குவது குறைவதால் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உண்டு. இதைதான் மத்திய வங்கி (RBI) செய்யும். மக்களிடம் பண புழக்கத்தை குறைத்து, அதன் மூலம் பொருட்களின் விலையை குறைய வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பணபுழக்கத்தை குறைக்க வங்கிகள் அதிக வட்டி தரும். பணவீக்க காலங்களில் இதெல்லாம் நடக்கும் என்றால், பணசுருக்கம் அல்லது DEFLATION காலங்களில் இதற்கு நேர்மறையாக வங்கிகள் திட்டங்களை வகுக்கும். இந்த விஷயத்தை கவனிக்கும் முன் DEFLATION ஆனால் என்னென்ன பாதிப்புகள் இருக்கும் என்பதை முதலில் பார்த்து விடுவோம்.

 

இப்படி DEFLATION என்ற ஒரு நிலை வந்தால், மக்களின் வாங்கும் சக்தியை கூட்ட, மக்களின் கையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வங்கி தரும் வட்டி விகிதங்களை குறைக்கும். அதாவது, நம் சேமிப்பை வங்கியில் வைப்பதை விட, கையில் வைத்துக்கொள்ளலாம், வங்கி வட்டி என்பது ஒரு லாபமான விஷயமில்லை என்னும் சூழ்நிலைக்கு வங்கி வட்டி குறையும். அதேமாதிரி வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும். இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில் தான் ஜப்பானில் வங்கியில் நம் பணத்தை deposit செய்தால் அந்த வங்கி நமக்கு வட்டி தராது - 1996 முதல் 2006 வரை ஜப்பானில் இந்த நிலை இருந்ததற்கு காரணம் DEFLATION என்று தெரியவரும்போது அதிர்ச்சியாக இருக்கிறதா? இதுதான் உண்மை நிலவரம். ஆக DEFLATION ஆனால் இந்த அளவுக்கு கூட நிலைமை போகலாம்.

 

இந்தக்கட்டுரை பல்வேறு இணையதளங்களில் இருந்தும் செந்த அனுபவத்தின் அடிப்படையிலும் புதுவலசை.இன் இணையதளத்திற்க்காக தொகுக்கப்பட்டுள்ளது.