பரவுகிறது என்.டி.எம்.-1' கிருமி

17/08/2010 12:49

 

 

மனிதனுக்கு வாய்ப்புகளும், வசதிகளும் பெருகப் பெருக பிரச்சினைகளும் அதிகரிக்கத்தான் செய்கின்றன.
 
நமக்கு இருப்பது போல் டெலிவிஷன், செல்போன், போக்குவரத்து போன்ற எந்த வசதிகளும் நம் முன்னோர்களுக்கு கிடையாது. காய்ச்சல், தலைவலி போன்ற ஏதாவது நோய் வந்தால், மருந்து, மாத்திரை எதுவும் கிடையாது, ஏதோ கசப்பான ஒரு கசாயத்தை வைத்து குடிப்பார்கள். அவ்வளவுதான் சிகிச்சை. வெறும் கசாயத்தை குடித்து விட்டு எழுந்து அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவார்கள். என்றாலும் அவர்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாகத்தான் கழித்தார்கள்.
 
விஞ்ஞான வசதிகளும், மருத்துவ வசதிகளும் இன்றைக்கு எவ்வளவோ பெருகி விட்டன. அந்த அளவுக்கு நாம் சந்திக்கும் பிரச்சினைகளும் அதிகரித்து விட்டன.
 
எமனிடம் இருந்து உயிரை மீட்டுக் கொண்டு வரும் அளவுக்கு மருத்துவத்துறை பிரமாண்டமான வளர்ச்சியை பெற்று உள்ளது. பல்வேறு நோய்களையும் குணப்படுத்தக்கூடிய நவீன மருந்துகள் வந்து விட்டன. என்றாலும் அந்த மருந்துகளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு புதிது புதிதாக நோய்களும் வந்து கொண்டுதான் இருக்கின்றன.
 
அப்படி ஒரு புதிய நோயை உருவாக்கும் பயங்கர நோய்க்கிருமி ஒன்று பரவி வருவது தற்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது.
 
அந்த நோய்க்கிருமியின் பெயர் `என்.டி.எம்.-1' என்பதாகும். `நியூடெல்லி மெட்டல்லோ பீட்டா லேக்டமேஸ்' என்பதன் சுருக்கம்தான் என்.டி.எம்.-1.
 
முதன் முதலாக டெல்லி ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளிக்கு நடத்திய பரிசோதனையின் போதுதான் இந்த நோய்க்கிருமி கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் டெல்லியை நினைவுபடுத்தும் வகையில் அந்த நோய்க்கிருமிக்கு என்.டி.எம்.-1 என்ற பெயரை சூட்டி விட்டார்கள். எந்த மருந்துக்கும் இது கட்டுப்படாது என்பதால் `சூப்பர் பக்' என்று அழைக்கப்படுகிறது.
 
நம் உடலில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும் கிருமிகள்தான் (பாக்டீரியாக்கள்) காரணம் ஆகும். இந்த கிருமிகளை கொன்று நோயை குணப்படுத்த நோய் எதிர்ப்பு மருந்துகளை (ஆன்டிபயாடிக்ஸ்) டாக்டர்கள் கொடுக்கிறார்கள். புதிது புதிதாக நோய் ஏற்படும் போது அந்த நோய்களை குணப்படுத்த புதிதாக மருந்துகளை மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கிறார்கள்.
 
ஆனால் தற்போது பரவி வரும் நோய்க்கிருமியான சூப்பர் பக் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத நோய்க்கிருமி ஆகும். எந்த சக்திவாய்ந்த ஆன்டிபயாடிக் மருந்தையும் இந்த நோய்க்கிருமி செயல் இழக்கச் செய்து விடும். இந்த நோய்க்கிருமி தாக்கினால் நிமோனியா, சிறுநீரகம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்பட பல்வேறு நோய்கள் உண்டாகும். எனவே அந்த நோய்க்கிருமியை அழிக்கும் நவீன மருந்தை கண்டு பிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
 
இந்த சூப்பர் பக் நோய்க்கிருமி இந்தியாவில் உருவாகி வெளிநாடுகளுக்கு வேகமாக பரவி வருவதாகவும், விரைவில் இந்த நோய்க்கிருமியால் உலக நாடுகள் பெரும் நெருக்கடியை சந்திக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்றும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளனர்.
 
இந்தியாவில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு இங்கிலாந்து திரும்பிய நோயாளிகளை பரிசோதித்த போது அவர்கள் உடலில் என்.டி.எம்.-1 என்ற கொடிய நோய்க்கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலை ` தி லான்சட்' என்ற விஞ்ஞான பத்திரிகையில் அவர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.
 
இங்கிலாந்து நாட்டில் உள்ள கார்டிப் பல்கலைக்கழகத்தில் மருத்துவ துறை ஆராய்ச்சியாளராக பணியாற்றும் திமோதி வால்ஷ் என்பவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானியான கார்த்திகேயன் என்பவரும் இணைந்து ஆராய்ச்சி நடத்தி இந்த என்.டி.எம்.-1 நோய்க்கிருமியை கண்டு பிடித்து உள்ளனர். கார்த்திகேயன் சென்னை பல்கலைக்கழக ஏ.எல்.முதலியார் அடிப்படை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் ஆராய்ச்சி மாணவர் ஆவார்.
 
இதுபற்றி திமோதி வால்ஷ் கூறுகையில்; இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் உள்ள நோயாளிகளிடம் தான் முதலில் என்.டி.எம்.-1 நோய்க்கிருமிகள் உற்பத்தி ஆகி உள்ளன என்றும், இந்த நாடுகளில் குறைந்த செலவில் மருத்துவ சிகிச்சை பெற வாய்ப்பு இருப்பதால் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இருந்து ஏராளமான பேர் சிகிச்சை பெற அங்கு செல்வதாகவும், எனவே அவர்கள் மூலம்தான் அந்த நோய்க்கிருமிகள் மற்ற நாடுகளுக்கும் பரவியதாகவும் தெரிவித்தார்.
 
இந்தியா, பாகிஸ்தானில் ஆபரேஷன் செய்து விட்டு திரும்பிய இங்கிலாந்தைச் சேர்ந்த 37 பேரிடம் இந்த நோய்க்கிருமி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
 
இந்த விவகாரம் தான் இப்போது, கிருமியின் தாக்கத்தைவிட அதிகமாக பற்றிக் கொண்டு எரிகிறது. இந்தியாவில் இருந்துதான் இந்த அபாயகரமான கிருமி பரவியது என்ற செய்தி பரப்பப்பட்டது மிகப்பெரிய சதிச்செயல் என்ற கருத்து உருவாகி இருக்கிறது.
 
இந்தியாவுக்கு ரூ.1,200 கோடி அளவுக்கு வருவாய் ஏற்படுத்தித்தரும் மருத்துவ சுற்றுலாவுக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்துடன், திட்டமிட்டு இந்த கிருமி பற்றிய தகவல் பரவி இருக்கிறது என்பது இந்திய அரசின் குற்றச்சாட்டு.
 
இந்த விவகாரம் குறித்து, தமிழக விஞ்ஞானி கார்த்திகேயன் கூறியதாவது:-
 
மருத்துவ துறையில் அதிக சக்தி வாய்ந்த `கார்ப்போபீனம்ஸ்' என்ற ஆண்டிபயாடிக் மருந்துக்கு கூட கட்டுப்படாதது இந்த சூப்பர்பக் நோய்க்கிருமி. இ-காலி, கே-நிமோனியா ஆகிய பாக்டீரியாக்களில் இந்த கிருமி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
 
சூப்பர் பக் நோய்க்கிருமியின் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு பெரிய அளவுக்கு அறிகுறிகள் தெரியாது. நோயாளியை பரிசோதனை செய்து பார்த்துத்தான் பாதிப்பை கண்டறிய முடியும். பாதிக்கப்பட்ட நோயாளிகளை மற்ற நோயாளிகளிடமிருந்து அப்புறப்படுத்தி வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மற்ற நோயாளிகளுக்கு பரவிவிடும். இந்த நோய்க்கிருமியால் நிமோனியா, சிறுநீரக பாதை சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் அபாயம் உள்ளது.
 
இந்தியாவில் மட்டும் இன்றி ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, ஆசிய நாடுகள் என உலகம் முழுவதுமே இந்த நோய்க்கிருமி காணப்படுகிறது.
 
இங்கிலாந்தில் 37 பேரிடமும், பாகிஸ்தான், வங்காளதேசம் உள்பட உலகின் இதர நாடுகளில் 73 பேரிடமும் சூப்பர்பக் நோய்க்கிருமி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, இந்தியாவில் இருந்துதான் வெளிநாடுகளுக்கு இந்த கிருமி பரவுகிறது என்ற குற்றச்சாட்டு உண்மை அல்ல. ஆகவே, இந்தியாவில் மருத்துவ சுற்றுலா (மெடிக்கல் டூரிசம்) ஒருபோதும் பாதிக்கப்படாது.
 
மேலும் இந்த நோய்க்கிருமி பற்றி நான் கொடுத்த அறிக்கையை எனக்கு தெரியாமலேயே திருத்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இதனால் தான் இப்போது பிரச்சினை கிளம்பி இருக்கிறது.
 
இந்த நோய்க்கிருமி ஆபத்தானது என்றாலும், பன்றி காய்ச்சல் நோய்க்கிருமி அளவுக்கு ஆபத்தானது அல்ல.
 
உலகம் முழுவதும் இருந்து கிருமியின் மாதிரியை எடுத்து சோதனை செய்த பிறகே இது குறித்து மேலும் தெளிவாக தெரியவரும். எனது ஆய்வை மேலும் தீவிரப்படுத்தி அந்த நோய்க்கிருமியை கட்டுபடுத்தக்கூடிய ஆண்டிபயாடிக் மருந்தினை குறைந்த செலவில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதுதான் எனது ஆசை.
 
இவ்வாறு கார்த்திகேயன் தெரிவித்தார்.

 https://www.maalaimalar.com/2010/08/15091123/information.html