பலஸ்தீன் பயிர்நிலங்களுக்குத் தீவைக்கும் ஆக்கிரமிப்பாளர்கள்

21/09/2011 22:57

கடந்த திங்கட்கிழமை (19.09.2011) இரவில் ஐனபூஸ் கிராமத்தில் உள்ள பலஸ்தீனர்களின் விளைநிலங்களுக்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தீமூட்டியுள்ளனர். சட்ட விரோத யூதக் குடியேற்றத்தைச் சேர்ந்த இந்த யூத ஆக்கிரமிப்பாளர்களிடம் அண்மைக் காலமாக ஆயுதப் புழக்கம் அதிகரித்திருப்பதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேற்படி தீவைப்பினால் ஏற்பட்டுள்ள சேதம் பற்றிக் கருத்துரைத்த இஸ்ரேலிய குடியேற்றத் திட்டப் பொறுப்பாளர் கஸ்ஸான் தஹ்லாஸ், 'நூற்றுக்கணக்கான தூனம் (1 தூனம் = 1000 ச. கிமீ) நிலப்பரப்பு முற்றாக எரிந்து போயுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

யூதக் குடியேற்றவாசிகளால் இப்பிரதேசத்தில் இது போன்று இன்னும் பல தாக்குதல்கள் நடாத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமது அரசியல் தலைவர்களினால் பலவாறு தூண்டப்படும் சட்டவிரோத யூதக் குடியேற்றவாசிகள் பலர், பலஸ்தீனர்கள் மீதும் அவர்களின் நிலங்களின் மீதும் தொடர்ச்சியான வன்முறைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றமை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே அங்கிருந்து வரும் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

inneram.com