பலஸ்தீன் மஸ்ஜிதை இடித்துத் தரைமட்டமாக்கிய ஆக்கிரமிப்பாளர்கள்

09/11/2010 22:06

Israeli Arab youths, holding green Islamic flags, stand on the rubble of a mosque, demolished by the Israeli police, in the Bedouin city of Rahat, southern Israel, Sunday, Nov. 7, 2010. Israeli police say they demolished an illegally built mosque in the southern Bedouin city of Rahat, touching off rock-throwing protests by residents.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (07.11.2010) ரஹத் எனும் பிரதேசத்தில் அமைந்துள்ள பலஸ்தீன் மஸ்ஜிதை சுற்றிவளைத்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ்படை அங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்த பலஸ்தீனர்களைப் பலவந்தமாக வெளியேற்றிவிட்டு அதனை இடித்துத் தரைமட்டமாக்கியுள்ளது.
"அவர்கள் திடீரென்று மஸ்ஜிதுக்குள் நுழைந்து அங்கே தொழுகையில் ஈடுபட்டிருந்த எங்களைக் கைதுசெய்து நகருக்கு வெளியே இழுத்து வந்தனர். பள்ளிவாயிலை இடித்துத் தரைமட்டமாக்கும் தமது அடாவடிச் செயலை நடாத்தி முடிக்கும் வரை எங்களைத் தமது பிடியிலிருந்து அவர்கள் நகரவிடவில்லை" என்று உள்ளூர்வாசியான யூசுஃப் அபூ ஜாமிர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்களின் இந்த மனித உரிமை மீறல் நடவடிக்கையைக் கண்டித்து வீதியில் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொண்ட பொதுமக்களை நோக்கி இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை எறிந்ததோடு, துப்பாக்கிப் பிரயோகமும் மேற்கொண்டது.

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபை இது குறித்துக் கருத்துரைக்கையில் வழமை போலவே, 'மேற்படி பள்ளிவாசல் கட்டடம் உரிய அனுமதிப் பத்திரம் பெறப்படாத நிலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 'அனுமதி பெறப்படாத கட்டடங்கள்' என்ற போர்வையில் இதே நகரில் இருந்த நூற்றுக்கணக்கான பலஸ்தீன் வீடுகள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபையால் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த மாதம் மேற்குக் கரைப் பிராந்தியத்திலுள்ள அல் கலீல் நகரின் பள்ளிவாயில் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த யூதத் தீவிரவாதிகள் குழுவொன்று அங்கிருந்த புனித குர்ஆன் பிரதிகளை எரித்ததோடு, முகம்மது நபி அவர்களை இழிவுபடுத்தும் வாசகங்களைச் சுவரெங்கிலும் எழுதி வெறியாட்டம் ஆடியுள்ளது.

அவ்வாறே, பல்வேறு யூதத் தீவிரவாதக் குழுக்கள் உலக முஸ்லிம்களின் மூன்றாவது புனிதத் தலமான பைத்துல் அக்ஸா பள்ளிவாயில் கட்டடத்தை நோக்கிப் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபை அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மௌனம் சாதித்து வருவதும் இன்னும் தொடர்கின்றது.