பிரிட்டிஷ் விஞ்ஞானிக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு

05/10/2010 15:55

பிரிட்டிஷ் மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சோதனைக் குழாய் மூலம் குழந்தைகளை பிறக்கச் செய்யும் முறையை மேம்படுத்தியதற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

இதனை மருத்துவத்துக்கான நோபல் பரிசு தேர்வு குழுவினர் திங்கள்கிழமை அறிவித்தனர்.

விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸின் முயற்சியால் 1978 ஜூலை 25-ல் பிரிட்டனில் முதல்முறையாக சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது.

1950-ம் ஆண்டுகளுக்கு முன் கருப்பைக்கு வெளியே கருவை உருவாக்கி பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறை இருந்தது. இதை ராபர்ட் எட்வர்ட்ஸ், பேட்ரிக் ஸ்டீப்டோ என்ற சக விஞ்ஞானியுடன் சேர்ந்து மேம்படுத்தினார். அவரது இந்த சிகிச்சை முறைக்கு "இன் விட்ரோ ஃபெர்டிலைசேஸன்' (ஐவிஎஃப்) என்று பெயர்.

ராபர்ட்ஸின் பங்களிப்பால் உலகம் முழுவதும் குழந்தை பாக்கியம் இல்லாத லட்சக்கணக்கான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 லட்சம் குழந்தைகள் சோதனைக் குழாய் மூலம் பிறந்துள்ளனர். அவரது முயற்சி நவீன மருத்துவ உலகில் ஒரு மைல்கல் என்று நோபல் பரிசு தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

 பிரிட்டனின் மான்செஸ்டரில்  1978 ஜூலை 25-ல் சோதனைக் குழாய் மூலம் முதன்முதலில் பிறந்த குழந்தை  லூயிஸ் பிரெüன்.

ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ்

 ராபர்ட் ஜி. எட்வர்ட்ஸ் 1925-ல் பிரிட்டனின் மான்செஸ்டரில் பிறந்தார். ராணுவத்தில் பணியாற்றிய அவர், 2-ம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயிரியல் படித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தின் எடின்பெர்க் பல்கலைக்கழத்தில் சேர்ந்தார். 1955-ல் பி.எச்டி. படிப்பை நிறைவு செய்தார்.

தொடர்ந்து 1958 முதல் லண்டன் தேசிய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாகப் பணியாற்றினார். 1963-ம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்து அங்கு பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டார். இங்குதான் தனது, "இன் விட்ரோ ஃபெர்டிலைசேஷன்' (ஐவிஎஃப்) (சோதனைக் குழாய் குழந்தை) ஆய்வை மேற்கொண்டார்.

அங்கு உலகின் முதல் ஐவிஎஃப் ஆய்வு மையமும் அமைக்கப்பட்டது. அங்கு சக விஞ்ஞானி பேட்ரிக் ஸ்டீப்டோவுடன் இணைந்து சோதனை குழாய் குழந்தை ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இப்போது 85 வயதான நிலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

உடல்நிலை பாதிப்பு

விஞ்ஞானி ராபர்டஸுக்கு இப்போது 85 வயதாகிறது. உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நோபல் பரிசு பெற்றது குறித்து கருத்துத் தெரிவிக்க அவரால் செய்தியாளர்களைச் சந்திக்க முடியவில்லை.

இது குறித்து நோபல் பரிசு குழுவில் இடம் பெற்றுள்ள ஜி. ஹன்சன் கூறியது: இந்த முக்கியமான தருணத்தில் துரதிருஷ்டவசமாக அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்ட செய்தியை ராபர்ட்ஸின் மனைவி மூலம் அவருக்குத் தெரிவித்தோம். அதை கேட்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக அவரது மனைவி தெரிவித்தார் என்றார்.

நோபல் பரிசை உருவாக்கியவர்

நோபல் பரிசு 1901-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இப்பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ம் ஆண்டில் பிறந்தார். வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் திறமை பெற்றவராகத் திகழ்ந்தார். டைனமைட் வெடிப்பொருளை கண்டுபிடித்தவர். பெரிய ஆயுதத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தினார். தனது கடைசி உயில் மூலம் தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார்.

அவரது நினைவு தினமான டிசம்பர் 10-ம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் நார்வேயில் வைத்தும் மற்ற பிரிவுகளுக்கான பரிசுகள் ஸ்வீடனிலும் வழங்கப்படுகின்றன. இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதாரம், அமைதி ஆகிய பிரிவுகளில் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவுக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை தலா ரூ.6 கோடியே 57 லட்சமாகும்.

இந்தியாவில் சோதனைக் குழாய் குழந்தை

உலகின் இரண்டாவது சோதனைக் குழாய் குழந்தை இந்தியாவில் பிறந்தது. இந்தக் குழந்தையை கொல்கத்தாவைச் சேர்ந்த டாக்டர் சுபேஷ் முகோபாத்யா, 1978 அக்டோபர் 3-ம் தேதி உருவாக்கினார். ஆனால், அவரது சாதனை மாநில அரசாலோ மத்திய அரசாலோ உரிய முறையில் அங்கீகரிக்கப்படவில்லை. பல இடங்களில் அங்கீகாரத்துக்குப் பதிலாக அவமானமே மிஞ்சியது.

மத்திய அரசு அவரை சர்வதேச மருத்துவ கவுன்சில் கூட்டங்களில் கலந்து கொள்ளக் கூட அனுமதிக்கவில்லை. 1980-ம் ஆண்டில் டாக்டர் சுபேஷ் முகோபாத்யா தற்கொலை செய்து கொண்டார்.1986-ல் தான் இந்தியாவில் சோதனைக் குழாய் குழந்தையை உருவாக்கிய முதல் டாக்டர் என்று முகோபாத்யாவின் பெயர் அங்கீகரிக்கப்பட்டது.

தினமணி