பிற்படுத்தப்பட்டோர் சலுகை பெற வருமான வரம்பு உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு

08/09/2010 09:57

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வழங்கும் சலுகைகளைப் பெற ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

கிராமப் புறங்களில் ரூ. 16,000 என்பது ரூ. 40,000 ஆகவும் , நகர்ப் புறங்களில் ரூ. 24,000 என்பது ரூ. 60,000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள உத்தரவி்ல்,

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் கீழ், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.

இலவச வீட்டு மனைகள், தையல் எயந்திரங்கள், சலவைப் பெட்டிகள் போன்றவற்றை வழங்கும் திட்டங்களின் கீழ் பயனாளிகள் பயன்பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 12,000 ஆக இருந்தது. 2000ம் ஆண்டில் இந்தத் தொகை கிராமப் புறங்களில் ரூ.16,000 ஆகவும் நகர்ப் புறங்களில் ரூ. 24,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.

அதன்படி, பயனாளிகளுக்கு வீட்டு மனைகளும், தையல் எந்திரங்களும், சலவைப் பெட்டிகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டத்தின்கீழ், அதிக எண்ணிக்கையில் பயனாளிகள் பயன்பெறும் வகையில், வருமான உச்சவரம்பை மேலும் உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசு இலவசமாக வழங்கி வரும் வீட்டு மனைகள், தையல் எந்திரங்கள், சலவைப் பெட்டிகள் ஆகியவற்றைப் பெறுவதற்குப் பயனாளிகளின் ஆண்டு வருமானம் கிராமப் புறங்களில் இப்போதுள்ள ரூ.16,000 என்பது ரூ. 40,000 ஆகவும், நகர்ப் புறங்களில் இப்போதுள்ள ரூ. 24,000 என்பது ரூ. 60,000 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

இலவச தையல் எந்திரம், சலவைப் பெட்டிகள் மற்றும் இலவச வீட்டு மனைப் பட்டாக்களைப் பெற பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் மாவட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

தையல் எயந்திரம் பெற வேண்டுமெனில், தையல் கலை தெரிந்திருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலாளர்களுக்கு மட்டுமே சலவைப் பெட்டிகள் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

வீடோ அல்லது வீட்டு மனையோ வைத்திருக்காத பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது.

சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 20% கூலி உயர்வு:

இந் நிலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் 33,750 பேருக்கு 20 சதவீத கூலி உயர்வும், விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் அறிவித்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு டன் ஒன்றுக்கு கையாளுதல் கூலியாக ரூ.17.95 வழங்கப்படும்.

மேலும் ஆண்டு ஒன்றுக்கு 10 விடுமுறை நாட்களுக்கு ஊதியமும் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ரூ.8.32 கோடி கூடுதலாக செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.