புளியங்குடியில் கர்ப்பிணி ஜமீலா பீவி இறந்த விவகாரம்: 2 டாக்டர்கள், செவிலியர் இடைநீக்கம்

08/11/2010 14:07

 

 

திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி இறந்தது தொடர்பாக 2 டாக்டர்கள், செவிலியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

 புளியங்குடி கீழப்பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த சுபஹானி மனைவி ஜமீலா பீவி (23). கடந்த ஜூன் 25-ம் தேதி பிரசவத்துக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் அங்கு சில மணி நேரத்தில் இறந்தார்.

 

  இதற்கு மருத்துவர்கள் கவனக்குறைவே காரணம் எனக் கூறி ஜமீலாபீவியின் உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.

 

 மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி, அவரது கணவர் சுபஹானி போலீஸில் புகார் செய்தார்.

 

  இக் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு கட்சியினரும் ஆர்ப்பாட்டம், தர்னாவில் ஈடுபட்டனர்.

 

  இதற்கிடையே, தமிழக முதல்வரின் நிவாரண நிதியாக ரூ. 2.5 லட்சம் தொகையை சுபஹானியிடம் ஆட்சியர் மு. ஜெயராமன் வழங்கினார்.

 

 சுகாதாரத் துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

  இந்நிலையில், மருத்துவமனையில் ஜமீலாபீவி அனுமதிக்கப்பட்டபோது, பணியில் இருந்த மருத்துவர்கள் கற்பகராஜ், சித்ரா சங்கரேஸ்வரி, செவிலியர் ஜானகி ஆகிய 3 பேர்  இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

 

  இதற்கான உத்தரவை, தமிழ்நாடு அரசு மருத்துவ பணிகள் இயக்குநர் பிறப்பித்துள்ளார்.

 

 

dinamani.com